புதுடெல்லி: அரசு ஆதரவு பெற்ற நபர்கள் மூலம் செல்போன் உளவு பார்க்க முயற்சிக்கப்படுவதாக எதிர்க்கட்சி எம்பிக்களின் ஐபோன்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய எச்சரிக்கையால் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய பாஜ அரசு எதிர்க்கட்சி எம்பிக்களின் செல்போனை ஒட்டு கேட்பதை வழக்கமாக கொண்டிருப்பதாக காங்கிரசின் ராகுல் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நீண்டகாலமாக குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருளை ஒன்றிய அரசு வாங்கியிருப்பதாகவும், அதன் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பல பிரபலங்களின் செல்போன் ஒட்டுகேட்கப்படுவதாக பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரசின் எம்பி மஹூவா மொய்த்ரா, காங்கிரசின் சசிதரூர், உத்தவ் தாக்கரே அணி சிவசேனாவை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மியின் ராகவ் சதா உள்ளிட்ட எம்பிக்களின் ஆப்பிள் ஐபோனுக்கு எச்சரிக்கை தகவல் வந்துள்ளது. அதில், ‘எச்சரிக்கை: உங்கள் ஐபோனை அரசு ஆதரவு பெற்ற நபர்கள் குறிவைக்கலாம். உங்கள் ஆப்பிள் ஐடியுடன் இணைக்கப்பட்ட ஐபோனை வேறு இடத்தில் இருந்து ரகசியமாக இயக்க அரசு ஆதரவு பெற்ற நபர்கள் குறிவைத்து முயற்சிப்பதாக நாங்கள் நம்புகிறோம். தனிப்பட்ட முறையில் உங்களை குறிவைத்துள்ள அந்த தாக்குதல் நபர்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறிய முயற்சிக்கலாம். அவர்கள் உங்கள் சாதனத்தில் நுழையும் பட்சத்தில், முக்கிய தகவல்கள், தகவல் தொடர்புகளை உளவுபார்க்கலாம் மற்றும் கேமரா, மைக்ரோ போன் உள்ளிட்டவற்றை இயக்கலாம். இந்த தகவல் தவறாக இருக்கக் கூடிய வாய்ப்பிருந்தாலும், இந்த எச்சரிக்கையை தயவுசெய்து தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என கூறப்பட்டுள்ளது.
இதே போன்ற எச்சரிக்கை நோட்டிபிகேஷன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் ஐபோனுக்கும் வந்திருப்பதாக அவரது கட்சி தெரிவித்துள்ளது. இதனால் இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எச்சரிக்கை தகவல் அடங்கிய ஸ்கிரீன் ஷாட்டை எதிர்க்கட்சி எம்பிக்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து ஒன்றிய பாஜ அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர். மஹூவா தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஒன்றிய அரசு எனது செல்போனை ஹேக் செய்ய முயற்சிப்பதாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து குறுந்தகவலும், இமெயிலும் எனக்கு வந்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகம் சலிப்பூட்டும் இதுபோன்ற விஷயங்களுக்கு பதிலாக ஆக்கப்பூர்வமாக வேறு ஏதாவது செய்யுமா? அதானி மற்றும் பிரதமர் அலுவலக அடிபொடிகளே, உங்களின் பயம் என்னை பரிதாபப்பட வைக்கிறது’’ என விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘150 நாடுகளில் உள்ளவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற எச்சரிக்கையை அனுப்பி உள்ளது. அனைத்து குடிமக்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு தீவிரமாக உள்ளது. அதன்படி, ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை தகவல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணையில் ஆப்பிள் நிறுவனமும் இணைய வலியுறுத்தி உள்ளோம்’’ என்றார்.
* அதானி விவகாரத்தை திசை திருப்பும் முயற்சி
டெல்லியில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியதாவது: எங்கள் கட்சி தலைவர்கள் கே.சி.வேணுகோபால், பவன் கேரா, சுப்ரியா னடே மற்றும் பலருக்கும் இந்த எச்சரிக்கை தகவல் வந்துள்ளது. இதைப் பார்த்து நாங்கள் பயப்பட மாட்டோம். எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுக்கும் எங்கள் போனை ஒட்டுகேளுங்கள். எங்களுக்கு கவலையில்லை. எனது போன் வேண்டுமானால் அதைக் கூட தர தயாராக இருக்கிறேன். ஒருகாலத்தில் ஒரு ராஜா இருந்தார். அவரை அவரது நாட்டு மக்களும் அண்டை நாட்டவர்களும் கடுமையாக எதிர்த்தனர். எதிராளிகள் பலமுறை தாக்குதல் நடத்தியும் அந்த ராஜாவுக்கு எதுவும் ஆகவில்லை. பின்னர் எதிராளிகள் ஒரு முனிவரிடம் சென்று, மக்களுடன் சேர்ந்து நாங்கள் எவ்வளவுதான் தாக்கினாலும் ராஜாவுக்கு எதுவும் ஆகவில்லை ஏன் என கேள்வி கேட்டனர். அதற்கு அந்த முனிவர், ‘ராஜாவின் ஆன்மா ஒரு கிளியிடம் இருக்கிறது’ என்றார். அதுபோல, பிரதமர் மோடியின் ஆன்மா அதானியிடம் இருக்கிறது. அதனால் அதானியை நீங்கள் தொட்டால், உளவுத்துறை உடனே உளவுபார்க்கத் தொடங்கி விடும். மோடியிடம் ஆட்சி இருந்தாலும் உண்மையான அதிகாரம் அதானியிடம் இருக்கிறது. நாட்டின் அதிகார சிஸ்டம் நம்பர்-1 அதானி, நம்பர்-2 மோடி, நம்பர்-3 அமித்ஷா என்ற வரிசையில் இருப்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே இந்த செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் அதானி விவகாரத்தை திசை திருப்பும் அரசின் முயற்சியே. ஆனால், அதானி தப்ப முடியாது, அவரை சுற்றி வளைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
* ஆப்பிள் விளக்கம்
எச்சரிக்கை தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ள ஆப்பிள் நிறுவனம், ‘குறிப்பிட்ட ஒரு அரசின் ஆதரவு பெற்ற நபர்களால் இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என ஆப்பிள் நிறுவனம் கூறவில்லை. அரசு ஆதரவு பெற்ற நபர்கள் என்பது மிகப்பெரிய அளவில் நிதி பெற்ற மற்றும் அதிநவீனமானவர்களை குறிக்கிறது. மேலும், அவர்களின் தாக்குதல்கள் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும். எதன் அடிப்படையில் இந்த எச்சரிக்கை தகவல் அனுப்பப்படுகிறது என்கிற தகவலை வெளிப்படுத்த முடியாது. ஏனெனில் அது எதிர்காலத்தில் ஹேக்கர்கள் பாதுகாப்பு அம்சத்தை மீறி அவர்களின் நடத்தையை மாற்றியமைக்க கூடும்’’ என கூறி உள்ளது. இதுபோன்ற எச்சரிக்கை தகவல் 150 நாடுகளில் ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.