பெரம்பூர்: செல்போன் விவகாரத்தில் தூக்கிட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த 36 வயது பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். இவருக்கு 16 வயதில் ஒரு மகளும் 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவரும் மாணவி எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டு இருப்பாராம். இதனால் அவரை தாய் அடிக்கடி கண்டித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து சிறுமி செல்போனில் பேசியதால் நேற்று முன்தினம் தாய் சிறுமியின் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டார். இதனால் சிறுமி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று காலை சிறுமியின் தாய் வேலைக்கு சென்றுவிட்டார். தம்பியுடன் வீட்டில் இருந்த சிறுமி திடீரென புடவையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்து தம்பி கூச்சல் போட்டதால் அக்கம் பக்கத்தினர் வந்தனர். பின்னர் சிறுமியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.