தண்டையார்பேட்டை: சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் நவாஸ்கான் (65). இவர், பாரிமுனை ஈவ்னிங் பஜாரில் உள்ள உறவினரின் செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த 4ம் தேதி இரவு, செல்போன் கடையில் இருந்து ரூ.50 லட்சத்தை எடுத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் இவர் வீட்டிற்கு புறப்பட்டார். மண்ணடி லிங்கி செட்டி தெரு சந்திப்பு அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் இவரை பின்தொடர்ந்து வந்த 5 பேர், நவாஸ்கான் பைக் மீது மோதினர். இதில், அவர் தடுமாறி கீழே விழுந்தார். உடனே, அவரிடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றனர். அப்போது, அவர் பையை பிடித்துக்கொண்டு அலறி கூச்சலிட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், கத்தியால் நவாஸ்கானை சரமாரியாக வெட்டிவிட்டு, அவரிடம் இருந்த ரூ.50 லட்சத்தை பறித்து சென்றனர். படுகாயமடைந்த நவாஸ்கானை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடிவந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, செங்குன்றத்தை சேர்ந்த கார்த்தி, போத்திராஜ், திருவொற்றியூரை சேர்ந்த சுரேஷ் ஆகிய 3 பேர் நேற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வடக்கு கடற்கரை போலீசார் முடிவு செய்துள்ளனர்.