ஓமலூர்: ஓமலூர் அருகே செல்போன் வாங்கி சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக, மூதாட்டியை தாக்கி நகையை பறித்த பிளஸ்2 மாணவியை போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் போதம்மாள் (65). இவரது கணவரும், மகனும் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில், அங்குள்ள பள்ளியில் பிளஸ்2 படிக்கும் 17 வயது மாணவி ஒருவர், போதம்மாள் வீட்டுக்கு மொபட்டில் சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த போதம்மாள் அணிந்திருந்த 2.5 கிராம் தோடுகளை கழற்றித் தருமாறு கேட்டுள்ளார்.
அவர் நகையை கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மாணவி, அங்கு கிடந்த கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினார். இதில், போதம்மாள் மயங்கி விழுந்தார். பின்னர், அவர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தியை பறித்துக்கொண்டு, அந்த மாணவி தன்னுடைய மொபட்டில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். மாலையில், வேலை முடிந்து அவரது குடும்பத்தினர் வந்த போது, போதம்மாள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து போதம்மாளின் மகன் சக்திவேல், ஓமலூர் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பிளஸ்2 மாணவி மொபட்டில் வந்து மூதாட்டியை தாக்கி நகை பறித்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாணவியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சமரசமாக செல்லலாம் என சிலர் பஞ்சாயத்து பேசியுள்ளனர். ஆனால் போலீசார் மாணவியை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘மாணவி புதிதாக செல்போன் வாங்கி, அதன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோ வெளியிட வேண்டும் என்ற ஆசையில், மூதாட்டியை தாக்கி நகையை பறித்துள்ளார். அந்த நகையை ஓமலூர், கடைவீதியில் உள்ள ஒரு அடகு கடையில் விற்பனை செய்து, ரூ.9 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். இதுகுறித்து நகை அடகு கடை உரிமையாளரிடம் விசாரித்தபோது, தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, அந்த மாணவி நகையை விற்பனை செய்வதாக கூறி பணத்தை வாங்கிச் சென்றது தெரியவந்தது. அந்த மாணவியை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளோம்,’ என்றனர்.
இதுகுறித்து மூதாட்டியின் உறவினர்கள் கூறுகையில், ‘அந்த சிறுமி 18 வயது நிரம்பாத நிலையில், தினமும் மொபட் ஓட்டி சென்று சாலையில் செல்வோரை அச்சுறுத்துவார். அதனால், டூவீலர் ஓட்டியதற்கும் அவர் மீது தனியாக வழக்குப்பதிவு செய்து, வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும், அதே நேரம் 2.5 பவுன் நகையை மாணவியிடம் வெறும் ரூ.9 ஆயிரம் கொடுத்து வாங்கிய அடகு கடைக்காரரையும் கைது செய்ய வேண்டும்’ என கூறியுள்ளனர். ரீல்ஸ் மோகத்தால் மாணவியை கொலை முயற்சி செய்து நகை பறிக்கும் மனநிலைக்கு கொண்டு சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.