வாஷிங்டன்: கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 250க்கும் மேற்பட்டோர் பிணை கைதிகளாக கடத்திச்செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகின்றது. ஹமாஸ்க்கு ஆதரவாக ஏமன் நாட்டின் ஹவுதிக்களும் இந்த போரில் ஈடுபட்டு வருகின்றது. இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக அதிபர் டிரம்ப் இந்த போர் நிறுத்தத்துக்கு அதிக அழுத்தம் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பிரதிநிதிகள் காசா தொடர்பாக இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காசாவில் 60 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது. நிலைமைகள் மோசமடைவதற்கு முன்பாக ஹமாஸ் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். போர் நிறுத்தத்தை ஹமாஸ் ஏற்காவிட்டால் அது சிறப்பாக மாறாது. நிலைமை மோசமாகி விடும். வருகிற திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துகின்றது. இதற்காக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வரவேற்பதற்கு வெள்ளை மாளிகை தயாராகி வருகின்றது” என்றார்.
டிரம்ப் நிர்வாகம் மீது 20 மாகாணங்கள் வழக்கு: அமெரிக்காவில் தனியார் மருத்துவ உதவி தரவுகளை நாடு கடத்தல் அதிகாரிகளுக்கு அரசு நிர்வாகம் பகிர்ந்து கொண்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் எதிரொலியாக கலிபோர்னியா மற்றும் 19 மாகாணங்கள் அதிபர் டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.