இந்தியா – பாகிஸ்தான் போர் கடந்த மாதம் நிறைவுற்ற நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் தற்போது நிலை கொண்டுள்ளது. யுத்தம் செய்வது மட்டுமே இஸ்ரேலுக்கு வேலை என சொல்லும் அளவிற்கு ஏற்கனவே காசாவில் குண்டுகளை வீசி, பாலஸ்தீன மக்களை பாடாய்படுத்தினர். கடந்தாண்டு ஏற்கனவே நடந்த இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் யுத்தம் இப்போது வேறொரு வடிவில் தொடங்கியுள்ளது. எங்களுக்கு எதிராக ஈரான் அணுகுண்டுகளை தயாரித்து வருகிறது என கூறிக்கொண்டு இஸ்ரேல், ஈரானின் அணுஆயுத தளங்களை தகர்க்க ஏவுகணை தாக்குதல்களை இப்போது நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு ‘ரைசிங் லயன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் திடீர் தாக்குதலால் ஈரானின் அணுசக்தி மையங்கள், ராணுவ தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் தகர்க்கப்பட்டு வருகின்றன. இதில் 75 பேர் கொல்லப்பட்டதாகவும், 320 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அனுப்பியது. சில ஏவுகணைகள், டிரோன்கள் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளை தாக்கி அழித்துள்ளன. இரு நாடுகளிலும் போர் அபாயம் உள்ள பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இரு நாடுகளும் மீண்டும் மாறி, மாறி தாக்குதல் நடத்தி வருவதால், தீவிர போராக இது மாறும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் எங்கள் தாக்குதலை தடுத்தாலோ, இஸ்ரேலுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவினாலோ அந்த நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்து வருகிறது. அந்த வகையில் இப்போரில் இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகளும் சிக்கும் ஆபத்துகளும் உள்ளன. உலக நாடுகள் இவ்விரு நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்த கேட்டு கொண்டாலும், அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக உலக நாடுகள் பல்ேவறு சிக்கல்களை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன.
போர் பதற்றம் காரணமாக தற்போது மத்திய கிழக்கு விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இரு நாடுகளும் தங்கள் வான்வழியை மூடிவிட்ட நிலையில், சர்வதேச விமானங்கள் அவ்வழியாக செல்ல முடியவில்லை. மேலும் போர் எதிரொலியாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயங்கள் உள்ளது. இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 2 எண்ணெய் கிணறுகள் பற்றி எரிந்தன. எண்ணெய் கிணறுகள் குறி வைக்கப்படுவதால், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தடைப்படும் நிலை உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், ேபார் பதற்றம் காரணமாக மேலும் விலை உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. நரேந்திர மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் விலைவாசி ஒருமுறை கூடி விட்டால், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை.
கடந்தாண்டு கச்சா எண்ணெய் நிலவரத்தை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியவர்கள், மீண்டும் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கையே இல்லை. மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர் காரணமாக மீண்டும் சர்வதேச சந்தையில் விலை உயருமோ என்கிற அச்சம் அனைவருக்குமே உள்ளது. போரை காரணம் காட்டி தங்கம் விலை உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழக முதல்வர் வலியுறுத்தி வருவது போல், ‘இனி வேண்டாம் போர்கள்’ என்பதை உலக நாடுகள் உணர வேண்டும்.