திருப்பூர்: திருப்பூர் காங்கேயம் சாலை ராக்கியபாளையம், ஜெய்நகர் பகுதியில் தனபால் என்பவர் குடியிருந்து வருகிறார். சமூக ஆர்வலரான இவரது வீட்டின் எதிரே வளர்ந்து இருந்த மரத்தை நேற்று முன்தினம் சிலர் வெட்டுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இது குறித்து புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். மரத்தை வெட்ட வந்த நபர்கள் அதிமுக பிரமுகரான விபிஎன் குமார் வீட்டின் பின்புறம் இந்த மரம் இருப்பதாகவும் இது அவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதால் அவர் சொல்லி தான் தாங்கள் வெட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும் மரத்தை வெட்ட அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மரத்தை வெட்டியதாக புகார் அளிக்கப் போவதாக தனபால் எச்சரித்ததை தொடர்ந்து நேற்று விபிஎன் குமார் தனது உறவினருடன் தனபால் வீட்டிற்கு நேரில் சென்று தனபாலை சரமாரியாக தாக்கி மிரட்டி விட்டு சென்றுள்ளார். இதில் காயமடைந்த தனபால் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் தொடர்பாக நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மரத்தை வெட்டிய நபர்களை தடுக்க முயன்ற சமூக ஆர்வலரை அதிமுக பிரமுகர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.