தாம்பரம்: குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது, என்று தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். தாம்பரம் மாநகராட்சி 64வது வார்டுக்கு உட்பட்ட கிழக்கு தாம்பரம், டாக்டர் டி.எஸ்.துரைசாமி நகர் சிறுவர் பூங்கா அருகே சேலையூர் காவல் நிலைய போலீஸ் பூத் மற்றும் கண்காணிப்பு கேமரா அறை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கலந்துகொண்டு, போலீஸ் பூத் மற்றும் கேமரா கண்காணிப்பு அறையை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பேசுகையில், ‘‘குற்றங்களை தடுப்பதற்கும், குற்றம் நடைபெற்றால் அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் சிசிடிவி கேமராக்கள் உதவியாக இருக்ககிறது. இப்பகுதியில் தற்போது 19 கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் 72 கேமராக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இவை அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் முழுவதிலும் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கிறார்களோ அதேபோல தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திலும் நவீன வசதியுடன் கட்டுப்பாட்டு அறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் குற்றச்சம்பவங்களை உடனுக்குடன் தடுக்க முடியும்,’’ என்றார். நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர காவல் இணை ஆணையர் மூர்த்தி, துணை ஆணையர் பவன்குமார், உதவி ஆணையர் முருகேசன், குடியிருப்போர் நல சங்க தலைவர் ரசலையன், மாமன்ற உறுப்பினர் ஷகிலா ஜான்சி மேரி, தாம்பரம் நகர காங்கிரஸ் தலைவர் ஜே.பி.விஜய் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.