சிவகங்கை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகள் விடுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். சிவகங்கையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், அளித்த பேட்டி: முதல்வர் அறிவித்துள்ள புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலமாக கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 36 கல்லூரி மாணவ, மாணவ விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 19 விடுதிகள் திறக்கப்பட்டன.
நடப்பாண்டில் 10 விடுதிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள நூல்களை, விடுதி மாணவர்கள் ஆன்லைன் மூலம் படிக்க வை-பை இணைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள எந்த நூலகத்தையும் தொடர்பு கொள்ள முடியும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகள் விடுதிகளிலும் ரூ.10.59 கோடி செலவில் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தி கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும். இவ்வாறு தெரிவித்தார்.