சென்னை: சிபிஎஸ்இ எனும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நாடு முழுவதும் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது. அதன்படி பிப்ரவரி 15ம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன. முன்கூட்டியே தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிபிஎஸ்இ 2024ம் ஆண்டு தேர்வு முடிவுகளை அறிவிக்கும் போது, 2025ம் ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் 15.02.2025 முதல் தொடங்கும் என்றும் அறிவித்திருந்தது. அதன்படி, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மற்றும் பொதுத்தேர்வு எழுதத் தகுதியுள்ள மாணவ மாணவியரின் பெயர்ப் பட்டியலை சமர்ப்பிக்குமாறு பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தி இருந்தது. தேர்வு எழுத உள்ளோர் பட்டியலில் மாணவர்கள் வழங்கும் பாடங்களின் அடிப்படையில், சிபிஎஸ்இ 15.02.2025 முதல் திட்டமிடப்பட்ட தேர்வுகளுக்கான அட்டவணையை தயாரித்துள்ளது. அட்டவணை தயாரிக்கும் போது, பின்வருவனவற்றைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
2 வகுப்புகளிலும் ஒரு மாணவரால் பொதுவாக வழங்கப்படும் 2 பாடங்களுக்கு இடையே போதுமான இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதியையும் கருத்தில் கொள்ளப்பட்டு, நுழைவுத் தேர்வுகளுக்கு முன்பே தேர்வுகளை முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ மற்றும் நுழைவுத் தேர்வுகள் இரண்டிற்கும் சிறந்த நேரத்தை நிர்வகிக்க இது மாணவர்களுக்கு உதவும். மதிப்பீட்டின்போது, அனைத்து பாடங்களின் ஆசிரியர்களும் ஒன்றாக மற்றும் நீண்ட காலத்திற்கு பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் பணியாற்றுவார்கள். ஒரு மாணவர் வழங்கும் எந்த 2 பாடத் தேர்வுகளும் ஒரே தேதியில் வரக்கூடாது என்பதற்காக 40,000-க்கும் மேற்பட்ட பாடக் கலவைகளைத் தவிர்த்து தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கும். முதன்முறையாக, தேர்வுகள் தொடங்குவதற்கு 86 நாட்களுக்கு முன்பாகவே இந்த ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன. மேலும், 2024-ஆம் ஆண்டுக்கான தேர்வுத் தேதி வெளியிடப்பட்ட தேதியுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 23 நாட்களுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மாணவர்கள் முன்கூட்டியே தேர்வுக்கு தயாராக முடியும். ஆசிரியர் தங்கள் பள்ளிகளை விட்டு விடுமுறையில் செல்லமுடியாத நிலை இருப்பதால் தனித் தேர்வர்களுக்கான படிப்புகள் தடைபடாத வகையில் சிபிஎஸ்இ தேர்வு அட்டவணைகளை திட்டமிட்டு தயாரித்து வெளியிட்டுள்ளது.