சென்னை: கடல் அகழ்வாராய்ச்சி நிறுவனம் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறவினர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள கேப்பிட்டல் டவர் கட்டிடத்தில் 10வது மாடியில் ‘ஜான் டி நல்’ என்ற பெயரில் பெல்ஜியம் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடல் அகழ்வாராய்ச்சி மற்றும் துறைமுகம் பகுதிகளில் கட்டிடங்களை கட்டும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடல் சார்ந்த கட்டுமானம், காற்றாலை மின் உற்பத்திற்கு தேவையான பொருட்களை விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அப்படி கட்டுமான பணியில் ஈடுபட்ட போது சில முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து துறைமுகம் அதிகாரிகள் சார்பில் அளித்த புகாரின் படி, சிபிஐ அதிகாரிகள் நேற்று ஜான் டி.நல் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும், சூளைமேடு பஜனை கோயில் தெருவில் வசித்து வரும் சுகுமார் என்பவர் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் நள்ளிரவு வரை சோதனை நடத்தினர். சுகுமார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறவினர் என்று கூறப்படுகிறது. சோதனையில் சிபிஐ அதிகாரிகள் 2 குழுவாக பிரிந்து சோதனை நடத்தினர். அப்போது துறைமுகம் பகுதியில் கட்டப்பட்ட கட்டிங்கள் தொடர்பான ஆவணங்கள், அகழ்வாராட்சி தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர். இந்த சோதனை முடிந்த பிறகு தான் மோசடி தொடர்பாக முழுமையான தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. சோதனை நடந்து வருவதால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான விபரங்களை சிபிஐ அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.