புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி,ஒன்றிய அமைச்சரின் போலி ஆவணங்கள் மற்றும் கடிதங்களைப் பயன்படுத்தி, போலி ஊழல் தடுப்பு அமைப்பை உருவாக்கி உறுப்பினர்களிடமிருந்து ரூ.25 லட்சம் வசூலித்ததாகக் கூறப்படும் சென்னையை சேர்ந்த இரண்டு மோசடி நபர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. சென்னையை சேர்ந்த ரெனிங்டன் சேல்ஸ் மற்றும் வின்சென்ட் ராஜூ ஆகியோர் ஊழல் எதிர்ப்பு மற்றும் குற்ற எதிர்ப்பு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
அதில் பல்வேறு நிர்வாகிகளை நியமிப்பதற்காக பலரிடம் இருந்து ரூ.25 லட்சம் பணம் வசூல் செய்துள்ளனர். இதில், ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் போலி கையெழுத்து மற்றும் அலுவலக முத்திரையை பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட இருந்த நிலையில் இருவருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், இருவருக்கும் எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்ற பத்திரிகை நேற்று தாக்கல் செய்துள்ளது.