செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சட்டவிதிகளுக்கு முரணாக இயங்கி வரும் பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி, நேற்று மாலை இடதுசாரி இயக்கங்களின் கூட்டுக்குழு சார்பில் சிபிஐ கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள சுங்கசாவடி, இதையடுத்து உள்ள தொழுப்பேடு சுங்கசாவடியில் இருந்து சட்டவிதிகளுக்கு மாறாக, சுமார் 60 கிமீ தொலைவுக்குள் அமைந்திருக்கிறது. மேலும், இந்த சுங்கச்சாவடியின் ஒப்பந்தம் கடந்த 2019ம் ஆண்டிலேயே காலாவதியாகியுள்ளது. இதனால் சட்டவிதிகளுக்கு முரணாக இயங்கி வரும் பரனூர் சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது மத்திய தணிக்கை துறை அறிக்கையிலும் இந்த சுங்கச்சாவடி சட்டவிரோதமாக ரூ28 கோடி சுங்க கட்டணம் வசூலித்திருப்பதாக ஆதாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. இந்த காலாவதியான பரனூர் சுங்கச்சாவடி மூலம் அப்பாவி மக்களை ஏமாற்றி பலகோடி சுங்க கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், இந்த சட்டவிரோத சுங்கச்சாவடியை தமிழக அரசு உடனடியாக அகற்ற வலியுறுத்தி, நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இடதுசாரி இயக்கங்களின் கூட்டுக்குழு சார்பில் சிபிஐ கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இக்கோரிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.