புதுடெல்லி: பார்மசி கல்லூரிகளுக்கு அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் அளிப்பதற்கான செயல்முறைகளில் இந்திய பார்மசி கவுன்சில் தலைவர் லஞ்சம் பெற்றதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சக செயலாளர் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் பார்மசி கவுன்சில் தலைவர் மோண்டு படேலின் நடவடிக்கைகளை சிபிஐ அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
2022ம் ஆண்டு டிசம்பர் வரை ஆப்லைன் முறையில் ஆய்வுகள் நடத்தப்பட்டது. அங்கீகாரம் கோரும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துவது அவசியமாகும். ஆனால் 2023-2024ம் ஆண்டு முதல் அங்கீகாரம் கோரும் கல்லூரிகளுக்கான நேரடி ஆய்வு முறை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு ஆன்லைன் விண்ணப்பங்கள் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் ஆய்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்தது தெரிந்தது. இதை தொடர்ந்து குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள இந்திய மருந்தியல் கவுன்சிலின் தலைவர் மோண்டு படேலின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள்.