டெல்லி: ராஜேந்திர பாலாஜி வழக்கில் அனுமதி கோரும் கோப்பு ஆளுநர் வசம் உள்ளது. ஆனால் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக கே.டி. ராஜேந்திர பாலாஜி இருந்தார். இவர் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 33 பேரிடம் 3 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது. எதிர்த்து ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் பங்கஜ் மிட்டல், எஸ்.வி.என் பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மேலும் லஞ்ச குற்றச்சாட்டு வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு விட்டது.ராஜேந்திர பாலாஜி வழக்கு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது பற்றி அனுமதி கோரும் கோப்பு ஆளுநர் வசம் உள்ளது. ஆனால் ஆளுநர் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. எனவே அனுமதிக்காக தற்போதும் காத்திருக்கிறோம் என தெரிவித்தார். பின்னர், ஆளுநரிடம் ஒப்புதல் பெற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக எதுவும் விவரிக்க முடியாத சூழலில் உள்ளோம்; பல பிரச்சனைகள் உள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் மார்ச் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அப்போது குறுக்கிட்ட ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர், தற்போதைய நிலையில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற ஆணைக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார். அதற்கு நீதிபதிபகள், தற்போது மேல்முறையீட்டு வழக்கை விசரணைக்கு எடுக்கவில்லை என தெரிவித்தனர்.