Saturday, June 14, 2025
Home செய்திகள் சிபிஐ விசாரணை துவங்கும் முன்பே குற்றவாளிகள் செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள் அழிப்பு; மிரட்டுவதற்காக வெளியிடப்பட்ட வீடியோவே முக்கிய தடயம்

சிபிஐ விசாரணை துவங்கும் முன்பே குற்றவாளிகள் செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள் அழிப்பு; மிரட்டுவதற்காக வெளியிடப்பட்ட வீடியோவே முக்கிய தடயம்

by MuthuKumar

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இளம்பெண்களை பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து ஒரு கொடூர கும்பல் மிரட்டியது. அப்போது, ‘‘அண்ணா… பெல்ட்டால் அடிக்காதீங்க… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்…’’ என்று ஒரு இளம்பெண்ணும், ‘‘டேய்…உன்னை நம்பித் தானே வந்தேன்…’’ என்று மற்றொரு இளம்பெண்ணும் கெஞ்சி கதறிய வீடியோக்கள் தமிழ்நாட்டையே உலுக்கின. சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 13ம் தேதி தீர்ப்பு வெளியானது. 9 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து, கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்ட உதவிய வீடியோக்கள்தான் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக மாறி, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர காரணமாக இருந்துள்ளது.

சிபிஐ திரட்டிய ஆதாரங்களை வைத்து வாதாடி குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை கிடைக்க முக்கிய காரணமாக இருந்தவர் சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன்.

அவர் கூறியதாவது:
இவ்வழக்கில் சிபிஐக்கு மிகவும் உறுதுணையாக தமிழ்நாடு காவல்துறையின் பெண் அதிகாரிகள் சிலர் இருந்தனர். காவல் ஆய்வாளர் பச்சையம்மாள் தலைமையில் சிறப்பு எஸ்ஐ உட்பட 7 பேர் கொண்ட அணி, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, ஆதாரங்களை திரட்டி, குற்றங்களை நிரூபிக்க பேருதவியாக இருந்தது. முதலில் தமிழ்நாடு காவல்துறையால் வழக்கு பதியப்பட்டு, அதன்பின் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு, 2 மாதங்களுக்கு பின் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அதற்குள் பாலியல் துன்புறுத்தல் வீடியோ ஆதாரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அவற்றை மீட்டெடுத்தால்தான் இந்த வழக்கில் வெற்றி பெற முடியும் என்ற நிலை சிபிஐ தரப்புக்கு ஏற்பட்டது. குற்றவாளி திருநாவுக்கரசின் ஐபோனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தன. உள்ளூர் போலீசார் கைப்பற்றிய அதை சிபிசிஐடி போலீசார், மண்டல தடயவியல் அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்திருந்தனர். சிபிஐ வழக்கை எடுத்தபின்பே அந்த முடிவுகள் வந்தன.

ஆய்வக அதிகாரிகளே அதை மீட்டுக் கொடுத்தனர். அந்த ஐபோன்தான் இந்த வழக்கின் இதயமாக இருந்தது. பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காண்பதே கடினமாக இருந்தபோது, அந்த வீடியோதான் அதற்கும் உதவியது. வீடியோவை வைத்து பெண்களை அடையாளம் கண்டுவிட்டாலும் யாருமே பேச முன்வரவில்லை. ஆனாலும், விசாரணை அதிகாரியாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் பச்சையம்மாள் தகவல்களை திரட்டியெடுத்தார். வழக்கு பதியப்பட்டபோது புகார் கொடுத்த பெண்ணின் பெயரை காவல்துறை அதிகாரி வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. அதே நேரத்தில் சில வீடியோக்களும் வெளியில் பரவிவிட்டன.

அதனால் பெண்கள் யாருமே புகார் கொடுக்க முன்வரவில்லை. அவர்களை அடையாளம் காண்பதும், அதற்குப்பின் அவர்களை அணுகுவதும், அவர்களை பேச வைப்பதும் பெரும் சவாலாக இருந்தது.கடந்த 2019ம் ஆண்டில் இதற்கான புகார் பதிவு செய்யப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அதே ஆண்டு மே 24ம் தேதி, வழக்கில் முதலில் கைதான சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஸ், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேர் மீதும் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. அதற்கு பின் இதே வழக்கில் கைதான அருளானந்தம், ஹேரன்பால் மற்றும் பாபு ஆகியோர் மீது 2021 பிப்ரவரி 22ம் தேதியும், இறுதியாக கைது செய்யப்பட்ட அருண்குமார் மீது 2021 ஆகஸ்ட் 16ம் தேதியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

திருநாவுக்கரசின் ஐபோன் மற்றும் சபரிராஜனின் லேப் டாப் இரண்டிலும் நிறைய வீடியோக்கள் இருந்தது. இரண்டிலும் பெரும்பாலும் ஒரே மாதிரியான வீடியோக்கள்தான் இருந்தன. சில வீடியோக்கள் மட்டும் லேப்டாப் மற்றும் ஐபோனில் வெவ்வேறானதாக இருந்தது. இவற்றில் பல வீடியோக்கள், பணத்துக்காக வந்தவர்கள் மற்றும் விருப்பத்துடன் வந்தவர்களிடம் எடுக்கப்பட்டவை. அவற்றையெல்லாம் கழித்துவிட்டு, உண்மையிலேயே இவர்களால் மிரட்டப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்களை மட்டும் கண்டறிந்து, அவர்களிடம் மட்டுமே வாக்குமூலம் பெறப்பட்டது.

இவை இரண்டும் இல்லாமலிருந்திருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வழியில்லாமல் போயிருக்கும். மின்னணு தடயங்கள்தான் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவியது. அத்துடன், பிரதான சாட்சியாகவும் இருந்தது. இந்த வழக்கில் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தது. செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்த ஆபாச வீடியோக்கள் அனைத்தும் ஒரிஜினல் என்பதையும், தொழில்நுட்பரீதியாக எதுவும் மாற்றப்படவில்லை என்பதையும் ஆய்வகம் மூலமாக உறுதிசெய்த பின்பே விசாரணையில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. பக்கத்து வீட்டுக்காரர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், தடயவியல் ஆய்வக அதிகாரிகள், தகவல் பரிமாற்றம் குறித்த சிடிஆர் உள்ளிட்ட ஆதாரங்களை வழங்கிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறை, சிபிசிஐடி மற்றும் சிபிஐ ஆகிய முகமைகளைச் சேர்ந்த 5 விசாரணை அதிகாரிகள் என மொத்தம் 48 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஒருவர்கூட பிறழ் சாட்சி அளிக்கவில்லை. இது, இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்த்தது. மொத்தம் 500 ஆவணங்களை சிபிஐ சேகரித்தது. பெண்களை கடத்தி சென்ற கார்கள், செல்போன்கள், லேப் டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட 50 பொருட்கள் சாட்சிகளாக காண்பிக்கப்பட்டன.

இந்த வழக்கில் வேறு விதமான ஒரு சவாலையும் சிபிஐ எதிர் கொண்டது. பாதிக்கப்பட்ட பெண்களில் 2 பேர், பட்டியல் பிரிவை சேர்ந்தவர்கள். அதனால் அவர்களை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிப்பது தவறு என்றும், அதற்கெனவுள்ள தனி நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்தரப்பில் ஒரு வாதம் வைக்கப்பட்டது. பட்டியல் பிரிவை சேர்ந்த பெண்ணுக்கு பாதிப்பு என்பதால், டிஎஸ்பி அந்தஸ்திலான அதிகாரிதான் விசாரிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலான அதிகாரி விசாரிப்பதும் தவறு என்றும் எதிர்தரப்பு வாதிட்டது. மணிப்பூர், வாச்சாத்தி போன்று இங்கு குறிப்பிட்ட ஓர் இனம் அல்லது சமுதாயம் குறி வைக்கப்படவில்லை. சாதிய அடிப்படையில் யாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி, குற்றவாளிகளிலும் பட்டியல் பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பதை எடுத்துக்கூறி அந்த வாதத்தை உடைத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

போக்சோ வழக்கு பதியாதது ஏன்..?
சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன் கூறுகையில், ‘‘பெரும்பாலான பாலியல் துன்புறுத்தல்கள், சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசுக்கு சொந்தமான பண்ணை வீட்டில்தான் நடந்துள்ளது. அது, கிராமம் என்பதால் யாருமே அந்த பக்கம் வருவதில்லை. அங்கே சிசிடிவி எதுவுமில்லை. இந்த பாலியல் துன்புறுத்தல்கள் பெரும்பாலும் 2016ம் ஆண்டிலிருந்து 2018ம் ஆண்டு வரை நடந்துள்ளது. ஆனால், முதல் புகாரே 2019ம் ஆண்டு பிப்ரவரியில்தான் பதிவானது. பல பெண்களை நட்பு ரீதியாகவும், காதலிப்பது போன்றும் ஏமாற்றியே அந்த பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கே வைத்து அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த பாதிக்கப்பட்ட பெண்களில் 18 வயதுக்குட்பட்ட எந்த சிறுமியும் இல்லாத காரணத்தால்தான் குற்றவாளிகள் யார் மீதும் போக்சோ வழக்கு பதியப்படவில்லை’’ என்றார்

  • காவல் ஆய்வாளர் பச்சையம்மாள் தலைமையில் சிறப்பு எஸ்ஐ உட்பட 7 பேர் கொண்ட அணி, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, ஆதாரங்களை திரட்டி, குற்றங்களை நிரூபிக்க பேருதவியாக இருந்தது.
  • குற்றவாளி திருநாவுக்கரசின் ஐபோன் மற்றும் சபரிராஜனின் லேப்டாப் இரண்டிலும் நிறைய ஆபாச வீடியோக்கள் இருந்தன. சிபிஐ வழக்கை எடுத்தபின்பே ஆய்வக அதிகாரிகள் வீடியோவை மீட்டுக் கொடுத்தனர்.
  • சிபிஐயிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படுவதற்குள் பாலியல் துன்புறுத்தல் வீடியோ ஆதாரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டது.

இதுவரை பெற்றோர்களுக்கு தெரியாது
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்கள் வெளியே தெரியாமல் இருப்பதற்காகவும், அவர்களின் தனியுரிமைகள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் சிபிஐ மிகவும் கவனத்துடன் இந்த வழக்கை கையாண்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்களிடம் கூட விசாரணை நடத்தாமல் ரகசியம் காத்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் பலருடைய பெற்றோருக்கு இந்த விஷயம் தற்போது வரை தெரியாது என்று சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரகோகன் தெரிவித்தார்.

மரண தண்டனை விதிக்காதது ஏன்..?
சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன் கூறுகையில், ‘ஒவ்வொரு குற்றவாளியாலும் எத்தனை பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாயினர் என்பதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு குற்றவாளிக்கும் ஒன்று முதல் 5 வரையிலான ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதற்காக ஒரு ஆயுள் தண்டனை பெற்றவர், விரைவில் விடுதலையாகிவிடுவார் என்று அர்த்தமில்லை. அனைவருக்குமே சாகும் வரை சிறைத்தண்டனை என்பதே இந்த தீர்ப்பு. கடந்த 2013ம் ஆண்டு நிர்பயா வழக்கிற்கு பின் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி, ஆயுள் தண்டனை என்பது, ஒரு குற்றவாளியின் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் சிறையில் இருப்பது என்று மாற்றப்பட்டுவிட்டது. இந்த பிரிவில் குறைந்தபட்ச தண்டனையே 20 ஆண்டுகளாக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றவாளிகள் அனைவர் மீதும் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதால், தண்டனை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களில், ஒருவருக்கு ரூ.25 லட்சம், இருவருக்கு தலா ரூ.15 லட்சம், இருவருக்கு தலா ரூ.10 லட்சம், ஒருவருக்கு ரூ.8 லட்சம், ஒருவருக்கு ரூ.2 லட்சம் என 7 பேருக்கு மொத்தம் ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டாலும் நேர்ந்த கொடுமைக்கு ஈடாகாது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் மரணம் அடையவில்லை. அப்படியிருந்திருந்தால் அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதையும்விட இதுபோன்று சாகும்வரை ஆயுள் தண்டனைதான் மிகச்சிறந்த தண்டனையாக இருக்க முடியும்’ என்றார்.

வாக்குமூலம் அளிக்க தயங்கிய பெண்கள்
‘‘வழக்கை சிபிஐ எடுத்தபின், 2 ஆண்டுகள் கோவிட் பெருந்தொற்று காலம் என்பதால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்திப்பதும், அவர்களிடம் வாக்குமூலங்களை பெறுவதும் பெரும் கஷ்டமாக இருந்தது. சிலருடைய வீடியோக்கள் வெளியாகிவிட்டதால், நமது வீடியோவும் வந்து விடுமோ என்று பலரும் பேசவே பயந்தனர். இதற்காக ரகசிய அணியாக நாங்கள் களம் இறங்கினோம். பெற்றோர், பக்கத்துவீட்டார் யாருக்கும் தெரியாமல் அந்த பெண்களை சந்தித்து பேசினோம். பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு மருத்துவ சிகிச்சையும், உளவியல் சிகிச்சையும் வழங்கிய பின்பே, அவர்கள் தங்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு, துணிச்சலாக வாக்குமூலம் கொடுக்க முன் வந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சந்தித்து பேசினோம். ஆனாலும், பாதிக்கப்பட்டவர்களில் 10க்கும் குறைவானவர்களே வாக்குமூலம் தர முன்வந்தனர்’’ என்றார் வழக்கறிஞர் சுரேந்திரமோகன்.

ஒரே நாளில் 9 முறை கொடூரம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மொத்தம் 8 பெண்கள் பாதிக்கப்பட்டு புகார் அளித்தனர். இதில் ஒரு பெண் ஒரே நாளில் 9 பேராலும் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார். முதலில் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி, ஒவ்வொருவரும் மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

தீர்ப்பு நகல் வழங்கப்பட்டது
9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 9 குற்றவாளிகளும் தங்கள் மீதான தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு ஒரு மாதகாலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக வழக்கின் தீர்ப்பு இலவச நகல் 9 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi