மண்டியா: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தற்போதைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு இரண்டு மாநிலங்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கன்னட திரைப்பட நடிகர் சிவராஜ்குமார் விருப்பம் தெரிவித்தார். இது குறித்து மண்டியாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஒன்றிய அரசு தலையிட்டால் மட்டுமே காவிரி விவகாரத்தின் பிரச்னையை தீர்க்க முடியும். கஷ்டமான இந்த காலக்கட்டத்தில் கர்நாடக மற்றும் தமிழக அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்னை தீரும். காவிரி விவகாரம் தொடர்பாக எப்போதும் விவசாயிகளின் பக்கம் நிற்போம். போராட்டம் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். எந்த மாதிரி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக அனைவரும் பேசி முடிவெடுப்பது நல்லது. கன்னடர்கள் போராட்டம் பெரிய அளவில் இருக்க வேண்டும். தீவைத்து எதிர்ப்பை தெரிவிப்பது அல்ல. அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும். நான் ஒரு கலைஞன், மூத்தவர்கள் ஒன்றுகூடி விவசாயிகள் பிரச்னையை தீர்க்க வழியை கண்டு பிடிக்க வேண்டும் என்றார்.