சென்னை: காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. அதனால்தான் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி: காவிரியில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்பதை ஆராய்ந்து சொல்வதற்கு தான் காவிரி ஒழுங்காற்று குழுவிற்கே அதிகாரம் உள்ளது. கடந்த 13ம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தின் நபர்கள் ஆய்வு செய்து விட்டு 12,500 கன அடி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு தரலாம் என்று கூறினார்கள். அதன் பிறகு 5,000 கன அடி தண்ணீர் கொடுக்கலாம் என்று கூறுகிறார்கள். காவிரி ஒழுங்காற்று குழு, இரண்டு பேருக்கும் சமமாக செயல்படுகிறதா இல்லை கர்நாடகத்திற்கு ஆதரவுக்காக செயல்படுகிறதா? இதை ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளேன். இதை விளக்கவில்லை என்றால், ஒன்றிய அரசு எதற்கு, காவேரி ஒழுங்காற்று குழு எதற்கு என்று ஒன்றிய அமைச்சரிடமே கேட்டேன். காவிரி ஒழுங்காற்று குழு ஒருதலைப்பட்சமாக, கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். அதனால் தான் நீதிமன்றம் சென்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.