புதுடெல்லி: காவிரி ஒழுங்காற்று குழு டெல்லியில் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு , கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்கின்றனர். காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், அதேப்போன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு,தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது மூன்று நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் இன்று பிற்பகல் இரண்டரை மணிக்கு டெல்லியில் தொடங்குகிறது. இதில் தமிழ்நாடு உட்பட நான்கு மாநில அதிகாரிகளும் காணொலி காட்சி மூலம் கலந்து கொள்கின்றனர். இதைத்தொடர்ந்து இதில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உடனடியாக இன்றே பரிந்துரைக்கப்படும். இதைத்தொடந்து நாளை கூடவிருக்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது ஒரு முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் நான்கு மாநில அதிகாரிகளும் நேரில் கலந்து கொள்வார்கள்.இதற்கிடையே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாததால், தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக நெல், கரும்பு உட்பட பயிர்கள் நீர் இல்லாமல் நாசமாகி விட்டது. அதனால் இதுபோன்று மிகப்பெரிய பாதிப்பை தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஏற்படுத்திய கர்நாடக அரசு ஒரு லட்சம் கோடி இழப்பீட்டு தொகையை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மனுவானது வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கோடு இணைத்து விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.