புதுடெல்லி: காவிரி நீர் முறைப்படுத்தும் ஒழுங்காற்று குழுவின் 101வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் அனைத்து உறுப்பினர்களும் அந்தத்த மாநிலத்தின் தலைமையிடத்திலிருந்து கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசின் தரப்பில் உறுப்பினர் ஆர்.தயாளகுமார்( தலைமைப் பொறியாளர் திருச்சி மண்டலம்), காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு சார்ந்த அதிகாரிகள் சென்னையில் இருந்து கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வைத்த கோரிக்கையில் ‘‘நடப்பாண்டு ஜூன் 1 முதல் ஆகஸ்டு 11ம் தேதி வரையில் உள்ள காலகட்டத்தில் மேட்டூர், பவானிசாகர் மற்றும் அமராவதி அணைகளின் தற்போதைய நீர்வரத்து, நீர் இருப்பு ஆகிய விவரங்களை ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை இயல்பான நிலையில் இருப்பதனால், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து வழங்கப்பட வேண்டிய நீரினை உச்ச நீதிமன்ற ஆணையின்படி காலதாமதம் செய்யாமல் பில்லிகுண்டுலுவில் வரும் மாதங்களில் கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.