சென்னை: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 30 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காவிரியில், தமிழகத்திற்கு போதுமான தண்ணீரை கர்நாடக திறந்துவிடவில்லை. இதனால், அண்மையில் டெல்லியில் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் புகார் தெரிவித்தார். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, டெல்லியில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது கூட்டம் நடைபெறவுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கான நீரை வழங்குவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்நிலையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 30 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட தமிழ்நாடு அரசு வலியுறுத்த முடிவு செய்துள்ளது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 41 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு தந்திருக்க வேண்டும். காவிரியில் இதுவரை கர்நாடகா 11 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்து விட்டுள்ளது. எஞ்சியுள்ள 30 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்து விட தமிழ்நாடு அரசு வலியுறுத்த முடிவு செய்துள்ளது. காவிரி கூட்டத்தில் நீர் வளத்துறை செயலாளர் சந்திப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் வலியுறுத்த உள்ளனர்.