சென்னை: காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை தமிழ்நாடு அரசு விட்டுக் கொடுக்காது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாமை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னை தூய்மையாக இருப்பதற்கு தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக பார்க்கும் பணியே காரணம் என்றார். அதிக நிதி ஒதுக்கப்பட்டும் குஜராத் மாநிலம் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை போட்டியில் அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் எந்த பதக்கங்களையும் வெல்லாததை பற்றி கேள்வி கேட்கப்பட்ட போது, ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை குறைவாக கொடுத்து வஞ்சிக்கிறது.
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கமே வாங்காத குஜராத் மாநிலத்துக்கு ஒன்றிய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநில சுயாட்சியை பறிக்கும் வேலையை பாஜக செய்கிறது; மாநில சுயாட்சியை மீட்டெடுக்கவே இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தமிழகத்தை பாரபட்சமாக பார்க்கிறது: நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் உதயநிதி பதில் அளித்தார்.
காவிரி விவகாரத்தில் பாஜக போராட்டம் அறிவித்துள்ளதை பற்றி எழுப்பிய கேள்விக்கு, சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ அவை மேற்கொள்ளப்படும். துறை சார்ந்த அமைச்சர்கள் தகுந்த விளக்கம் அளித்துள்ளனர். எப்போதும் தமிழகத்தின் உரிமையை இந்த விவகாரத்தில் விட்டு கொடுக்கமாட்டோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் செம்மஞ்சேரி சர்வதேச விளையாட்டு மெகா சிட்டி பணிகள் 20 நாட்களில் தொடங்கும் என்றார்.