திருச்சியில் இருந்து முக்கொம்பு அணைக்குச் செல்லும் வழியில் வயலூர், எட்டரை கோப்பு உள்ளிட்ட அழகிய கிராமங்கள் இருக்கின்றன. காவிரி ஆறு பாயும் இந்தக் கிராமத்தில் நெல், காய்கறி, மலர் வகைகள் என பலவிதமான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் பிரதான பயிர் என்றால் அது வாழைதான். அதிலும் இன்னொரு சிறப்பு இருக்கிறது. இந்தச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் நேந்திரன் வாழைக்கு செம மவுசு. அதாவது கேரளாவில் திருச்சி சுற்றுவட்டார நேந்திர வாழைக்கு சரியான கிராக்கி. இதனால் இங்கு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நேந்திரன் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. அவ்வாறு விளைவிக்கப்படும் நேந்திரன் வாழைகள் வியாபாரிகளால் மொத்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் வாழை விவசாயத்தில் ஈடுபடும் முன்னோடி விவசாயி ஒருவரைத் தேடியபோது முள்ளிகிரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரைக் கை காட்டினார்கள். அவரது வாழைத்தோட்டத்திற்கு சென்றபோது, அறுவடைப் பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. பணிகளுக்கு இடையே நம்மிடம் பேசினார்.
“நான் கடந்த 20 வருசமா நேந்திரன் வாழையை சாகுபடி பண்றேன். அதுவும் குத்தகை நிலத்துலதான் பண்றேன். இதுல நல்ல விளைச்சல் கிடைக்கும், நல்ல விலையும் கிடைக்கும், சீக்கிரமா அறுவடை பண்ணிடலாம்னு நாங்க தொடர்ச்சியா இதைப் பயிர் பண்றோம். வழக்கமா நாங்க வைகாசி மாசத்துல சாகுபடியை ஆரம்பிப்போம். அப்பதான் சரியான பருவத்துல அறுவடைக்கு வரும். எங்க பகுதியில் இருக்குற மண்ணும், தண்ணியும் நேந்திரன் வாழை விளையுறதுக்கு ஏத்த மாதிரி இருக்கு. அதனால இங்க விளையுற காயும், பழங்களும் நல்ல சுவையில இருக்கும். கேரளாவுல எங்க காய், பழங்களுக்கு நல்ல மவுசு இருக்கு. காயை சிப்ஸ் பண்ணுவாங்க. பழத்தை அப்படியே சாப்பிடுவாங்க’’ என தன்னைப் பற்றியும், தங்கள் ஊரின் மகத்துவத்தைப் பற்றியும் பெருமை பொங்க கூறிய குமாரிடம் நேந்திரன் சாகுபடி விபரங்களைக் கேட்டோம்.
“நேந்திரன் வாழையை சாகுபடி செய்ய முதல்ல டிராக்டரால புழுதி ஓட்டுவோம். 3 உழவு முடிச்ச பிறகு விதைக்கட்டைகளை ஊனுவோம். போன வருசம் சாகுபடியில கிடைச்ச மரங்கள்ல இருந்து நல்ல மரமா பார்த்து விதைக்கட்டைகளை எடுத்து வச்சி நடவு பண்ணுவோம். அதை செடிக்கு செடி, வரிசைக்கு வரிசைன்னு 7 அடி இடைவெளி கொடுத்து அரை அடி அளவுக்கு குழியெடுத்து நடுவோம். நட்ட பிறகு செடிங்களுக்கு பக்கத்துல கிடங்கு (கான்) போடுவோம். முன்னல்லாம் 5 அடி ஆழத்துல கிடங்கு போடுவோம். இப்ப ஆள் பற்றாக்குறை இருக்குறதால 2 அடி, 3 அடி ஆழத்துக்கு கிடங்கு போடுறோம். அதுலதான் நாங்க தண்ணீர் பாசனம் பண்ணுவோம். இதுக்கு நாங்க 15 நாளுக்கு ஒருமுறையோ, 20 நாளுக்கு ஒருமுறையோ பாசனம் செய்வோம். எங்க பகுதியில இருக்குறது களிமண்ணு. ஈரத்தை நல்லா தக்க வச்சிக்கும். ஒரு தடவை பாசனம் செஞ்சா பல நாட்களுக்கு ஈரம் இருக்கும். அதனால நாங்க பாசனம் செஞ்சி தண்ணியை வெளியேத்திடுவோம். தண்ணி அதிகமா தேங்கி நின்னா கிழங்கு அழுகிடும்.
விதைக்கட்டை ஊனிய 4வது நாள்ல கிடங்கு பக்கத்துல இருக்குற களைச்செடிகளைப் பிடுங்கி கிடங்குக்குள்ள போட்டுடுவோம். அது வாழைக்கு உரமாகிடும். கிடங்கு வெட்டும்போது வெளியேத்திய மண்ணை எடுத்து விதைக்கட்டைகளுக்கு மண் அணைப்போம். அதுக்கப்புறம் 3 மாசம் கழிச்சி பாக்டம்பாஸ், யூரியா, பொட்டாஷ் இது மூனையும் கலந்து 10 மூட்டைங்குற கணக்குல போடுவோம். உரம் வைக்கும்போது செடிகளைச் சுத்தி வட்டமா குழி பறிச்சி போடுவோம். உரம் போட்ட பின்னாடி பாசனம் பண்ணுவோம். உரம் வச்ச 4வது நாள்ல டைட்டோசைம்ங்குற மருந்தைத் தெளிப்போம். இந்த மருந்து காய் நல்லா பிடிக்கவும், மரம் தடுமனா வளரவும் உதவி பண்ணும். இதே மாதிரி பூச்சி, நோய்கள் வந்தா அதுக்கேத்த மருந்துகள தெளிப்போம். அக்ரி டிபார்ட்மெண்ட் அதிகாரிகங்களை கேட்டு அவங்க சொல்ற மருந்தைத்தான் நாங்க போடுவோம். இப்படியே பராமரிப்பு செஞ்சிக்கிட்டு வந்தோம்னா நல்ல நீளமான தார்கள் கிடைக்கும். தார் வரும்போது மரத்துக்கு பக்கத்துல சவுக்கு கம்புகளை நட்டு கயிறு வச்சி கட்டுவோம். இது காத்தடிச்சா மரமோ, தாரோ சாயாம பார்த்துக்கும்.
நடவு செஞ்சதுல இருந்து சரியா 10வது மாசத்துல காய் வெட்டு ஆரம்பிக்கலாம். முதல் வெட்டு முடிஞ்சவுடனே 20 நாள் கழிச்சி 2வது வெட்டு அறுவடை செய்யலாம். அதே மாதிரி 3வது வெட்டு அறுவடையும் பண்ணலாம். 3 வெட்டுல தோட்டம் காலியாகிடும். 3 வெட்டுக்கும் சேர்த்து ஒரு ஏக்கருக்கு எப்படியும் 10 டன் காய் மகசூலா கிடைக்கும். ஒரு கிலோ காய்க்கு இப்போ 40 ரூபாய்ல இருந்து 48 ரூபாய் வரை விலை கிடைக்குது. குறைஞ்சபட்சமா 40 ரூபாய் கிடைச்சா கூட 4 லட்சம் வருமானமா கிடைக்கும். இதுல அதிகபட்சமா 2 லட்சம் செலவானாக் கூட 2 லட்சம் லாபமா கிடைக்கும்’’ என்கிறார். விவசாயிகளின் நிலத்தில் நேந்திரன் தார்கள் அறுவடைக்கு தயாரானதும் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் வயலுக்கே சென்று ஆட்களை வைத்து அறுவடை செய்து, கேரளாவில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். இந்த பிராசஸ் குறித்து பெட்டவார்த்தலை பகுதியைச் சேர்ந்த மொத்த வியாபாரி முகம்மது நாசரிடம் கேட்டோம்.
“தமிழகத்தில் திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி என ஒருசில மாவட்டங்களில் நேந்திரன் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதில் திருச்சி பகுதியில் பயிரிடப்படும் நேந்திரன் வாழை நல்ல ருசியாகவும், அளவில் பெரிதாகவும் இருக்கும். நான் 20 ஆண்டுகளாக இந்த வியாபாரத்தில் இருக்கிறேன். தார் அறுவடைக்கு தயாராக இருக்கிற வயல்களுக்கு சென்று, தார்களை அறுவடை செய்து கேரளாவில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு அனுப்புவோம். அந்த மாநிலத்தில் இதை ஒரு தெய்வீக பழமாகவே பார்க்கிறார்கள். தினமும் அவர்களுக்கு நேந்திரன் வாழை வேண்டும். பழமாகவோ, சிப்ஸாகவோ அவர்கள் இதை விரும்பி சாப்பிடுவார்கள். இந்தப் பழத்தில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மருத்துவக்குணங்களும் மிகுதியாக இருக்கிறது. இதனால் கேரளாவில் இதற்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது’’ என்கிறார்.
தொடர்புக்கு:
குமார்: 98424 35571
முகமது நாசர்: 87785 06311
திருச்சி மாவட்டத்தில் பெட்டவார்த்தலை பகுதியில் இருந்து சோமரசம்பேட்டை வரையிலான பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர்களில் நேந்திரன் வாழை பயிரிடப்படுகிறது.