கொடுமுடி: ஆடி பெருக்கு தீர்த்தம் எடுக்க சென்றபோது காவிரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி தட்டாம் பாளையம் கொண்டலாம்புதூர் காலனியை சேந்தவர் கோபி. இவரது மகன்கள் குப்புராஜ் (19), சவுத்ரி (14). இதே பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் ஜெகதீஸ்வரன் (18). குப்புராஜ் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோர் தனியார் கல்லூரியில் டி.எம்.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தனர். சௌத்ரி தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
மூவரும் காலனியில் உள்ள மதுரை வீரன் கோயிலுக்கு ஆடிப்பெருக்கையொட்டி தீர்த்தம் எடுக்க ஒரே பைக்கில் கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் காவிரி ஆற்றங்கரைக்கு சென்றனர். சவுத்ரி ஆற்றில் இறங்கி குளித்தபோது நீரில் மூழ்கினார். இதைக்கண்ட குப்புராஜ், ஜெகதீஸ்வரன் ஆகியோர் அவரை காப்பாற்ற முயன்றனர். இதில் மூவரும் நீரில் மூழ்கி இறந்தனர்.உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.