பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கே.ஆர்.எஸ் அணை நிரம்பவுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 25,000 கனஅடி நீர் திறக்க வாய்ப்புள்ளது. மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கே.ஆர்.எஸ் அணையின் மொத்த உயரம் 124.80 அடி ஆகும். நேற்று மாலை நேர நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118 அடியாக இருந்தது. குடகு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், அங்குள்ள ஹாரங்கி அணையிலிருந்து காவிரி ஆற்றில் அதிக நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் மொத்தமும் கே.ஆர்.எஸ் அணையை வந்தடையும் என்பதால், விரைவில் கே.ஆர்.எஸ் அணை நிரம்ப வாய்ப்புள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி, முதற்கட்டமாக சுமார் 10,000 கனஅடி முதல் 25,000 கனஅடி வரை உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கே.ஆர்.எஸ் அணை நிர்வாகம் எச்சரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கே.ஆர்.எஸ் அணை நிரம்பவுள்ளதால் அடுத்த சில நாட்களில் உபரி நீர் அதிகமாக திறக்கப்பட்டால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதால், வெள்ளப்பெருக்கால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளவும், நிர்வாக வசதிக்காகவும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படவுள்ளது. மண்டியா மாவட்டத்தின் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் 53 கிராமங்கள், பாண்டவபூர் தாலுகாவில் 15 கிராமங்கள், மலவல்லி தாலுகாவில் 21 கிராமங்கள், ஹேமாவதி படுகையில் உள்ள கே.ஆர்.பேட்டை தாலுகாவில் 3 கிராமங்கள் என மொத்தம் 92 கிராமங்கள் வெள்ள அபாய கிராமங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மாவட்ட மற்றும் தாலுகா அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கே.ஆர்.எஸ் அணையின் மொத்த கொள்ளளவு 49.452 டிஎம்சி ஆகும். நேற்று மாலை நேர நிலவரப்படி, 38.900 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. கே.ஆர்.எஸ் அணைக்கு வினாடிக்கு 44,617 கனஅடி நீர்வரத்து உள்ளது. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையில் நேற்று 114.90 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. அணையிலிருந்து 25,600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கபினி அணையின் நீர்மட்டம் 2,284 அடி (கடல்மட்ட அளவில்) உயரம் ஆகும். கபினி அணையில் நேற்று 2,280.01 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 19.52 டிஎம்சி ஆகும். நேற்றைய நிலவரப்படி, 17.05 டிஎம்சி நீர் அணையில் இருப்பு உள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 49,334 கனஅடி நீர்வரத்து உள்ள நிலையில், 61,200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 2859 அடி உயர ஹாரங்கி அணை நிரம்பிவிட்டது. ஹாரங்கி அணைக்கு வினாடிக்கு 22,520 கனஅடி நீர்வரத்து உள்ள நிலையில், 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.