Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

காவிரியில் உபரி நீர் வெளியேற்றம்; பவானி கூடுதுறையில் பக்தர்கள் நீராடும் பகுதி நீரில் மூழ்கியது: படகு போக்குவரத்து நிறுத்தம்

பவானி: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பவானி கூடுதுறையில் பக்தர்கள் நீராடும் பகுதி நீரில் மூழ்கியது. கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியதால், உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று மாலை எட்டியது. இதையடுத்து, காவிரி ஆற்றில் 58 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து காவிரிக் கரையோரப் பகுதிகளில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரையோர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர், பவானி கூடுதுறையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கூடுதுறையில் படித்துறைகளும், பக்தர்கள் நீராடும் பகுதியும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. ஆனால், பக்தர்கள் பாதுகாப்பாக நீராட அனுமதிக்கப்படுகின்றனர். கூடுதுறை பகுதியில் படித்துறைகளில் பக்தர்கள் இறங்குவதை தடுக்க, வழித்தடங்கள் அனைத்திலும் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டையில் கரையோரத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பயணிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.