மயிலாடுதுறை: கர்நாடக மாநிலம், தலைக்காவிரியில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் 14ம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரதயாத்திரை கடந்த மாதம் 20ம் தேதி துவங்கியது. இந்த யாத்திரை காவிரி நதி செல்லும் பாதை வழியாக சென்று மயிலாடுதுறை மாவட்டம் காவிரிநீர் கடலில் கலக்கும் பகுதியான பூம்புகாரில் இன்று மாலை நிறைவடைகிறது. யாத்திரையின்போது காவிரியை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்த ரத யாத்திரை நேற்றிரவு மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்துக்கு வந்தடைந்தது. காவிரியின் வடகரையில் ராமானந்த சுவாமிகள் தலைமையில் 20 சந்நியாசிகள் அடங்கிய ரத யாத்திரை குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் காவிரி தீர்த்த படித்துறையில் காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா ஆரத்தி, தீபாராதனை காண்பித்து சந்நியாசிகள் வழிபாடு நடத்தினர்.
இன்று மாலை ரத யாத்திரை காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் சங்கமத்தில் நிறைவடைகிறது.