பெங்களூரு: தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பான ஒழுங்காற்று குழு முடிவு பற்றி கர்நாடக முதல்வர், துணை முதல்வரின் முரண்பட்ட கருத்தால் அம்மாநிலத்தில் பர பரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு இன்று முதல் அக்டோபர் 15 வரையிலான 18 நாட்களுக்கு வினாடிக்கு 3000 கனஅடி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு நேற்று முன் தினம் பரிந்துரைத்தது.
தமிழ்நாடு 12,500 கனஅடி நீர் கேட்ட நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்று குழு 3000 கனஅடி திறந்துவிடுமாறு பிறப்பித்த உத்தரவு கர்நாடகாவிற்கு சாதகமானது என்று கூறிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழ்நாட்டின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். ஆனால் முதல்வர் சித்தராமையா, ’காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும். தமிழ்நாட்டிற்கு வழங்க எங்களிடம் தண்ணீர் இல்லை’ என்றார்.
துணை முதல்வர் டி.கே.சிவகுமார் காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்ட நிலையில், முதல்வர் சித்தராமையா தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கும் உத்தரவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று கூறியிருப்பது முரணாக உள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.