பொதுவாக கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தொற்று நோய், தொற்றாத நோய் என இருவகைகளாகப் பிரிக்கலாம். தொற்றுநோய் என்பது நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளிடம் இருந்து காற்று, தண்ணீர், நேரிடைத் தொடர்பு அல்லது மற்ற தொடர்புகள் மூலமாக இதர கால்நடைகளுக்கும் எளிதாகப் பரவும் நோயாகும். கால்நடைகளுக்கு வரும் வெக்கைநோய், தொண்டை அடைப்பான், கோமாரி, அம்மைநோய், சப்பைநோய் போன்ற நோய்கள் இந்த வகையைச் சேர்ந்தவை. ஒரு குறிப்பிட்ட மாட்டிற்கு மட்டும் நோய் வந்து அதன் அருகில் உள்ள மற்ற மாடுகளுக்கு பரவாமல் இருந்தால் அதை தொற்றாத நோய் என்கிறோம். பச்சை வாதம், வயிற்றுப் பொருமல் போன்ற நோய்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய நோய்கள் வந்தவுடன் குணப்படுத்துவதை விட வரும்முன் காப்பதே சிறந்தது.
வெக்கைநோய்
வெக்கை நோய் ஒரு கொடிய தொற்று நோய். ஒரு மாட்டிற்கு வந்தால் மற்ற மாடுகளுக்கும் விரைவில் பரவி பெரும் சேதத்தை விளைவித்துவிடும். எருமை பசுக்களை இந்நோய் அதிகம் தாக்குகிறது.
அறிகுறிகள்
இந்த நோய் வந்த கால்நடைகளுக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கும். தீனி சாப்பிடாது. கண்கள், வாய், நாசியில் இருந்து தொடர்ந்து நீர் வடிந்து கொண்டிருக்கும். உதடுகளின் உட்புறம், ஈறுகள், நாக்கின் அடிப்புறம் ஆகிய பகுதிகளில் புண்கள் உண்டாகும்.
கெட்ட நாற்றத்துடன் கூடிய கழிச்சல் வெகு தூரம் வரை பீச்சியடிக்கும். இதனால் 7 முதல் 10 நாட்களுக்குள் மாடுகள் இறந்துவிடும்.
தடுப்பு முறைகள்
எல்லா மாடுகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும். ஒருமுறை தடுப்பூசி போட்டால் மூன்று வருடங்களுக்கு நோய் வராது. கன்று போட்ட 6 மாதத்தில் முதல் ஊசி போட வேண்டும். பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை போடலாம்.
பசு அம்மை நோய்
பசு அம்மை நோய் ஒரு கொள்ளை நோய் அல்ல. ஆனால் எளிதில் பரவும் தொற்றுநோய் ஆகும். அம்மைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கறவையாளர்களுக்கும் இந்நோய் மாடுகளிலிருந்து தொற்றிக்கொள்ளும். அதுபோல் சமீபத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட கறவையாளர்களிடமிருந்து மாட்டுக்குத் தொற்றிக்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அறிகுறிகள்
காய்ச்சல் ஏற்படும். மடியிலும், காம்பு களிலும் நுண்ணிய சிவப்புப் புள்ளிகள் தோன்றி விரைவில் அவை கொப்புளங்களாக மாறும். கவனிக்காவிட்டால் அவை நாளடைவில் புண்களாக
மாறிவிடும்.
தடுப்பு முறைகள்
பொதுவான தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். புண்களை பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த நீரினால் கழுவி, பெரிக் ஏசிட்டை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பூசிவிடவேண்டும்.