*நிரந்தர இடத்தில் நடத்த விவசாயிகள் கோரிக்கை
ஈரோடு : ஈரோடு மாட்டுச்சந்தையில் ஒரு மாட்டிற்கு கட்டணம் என்ற பெயரில் இருமுறை வசூலிப்பதை கைவிட வேண்டும் என்றும் சந்தையை நிரந்தர இடத்தில் நடத்த வேண்டும் என்றும் விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகே, மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் மாட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் வியாழக்கிழமை கூடும் இம்மாட்டு சந்தை தனியார் இடத்தில் உள்ளது. மேலும், டெண்டர் விடப்பட்டு, தனியார் மூலம் மாட்டுச்சந்தை நிர்வாகிக்கப்பட்டு வரப்படுகிறது.
இந்த சந்தைக்கு ஈரோடு சுற்றுப்புற பகுதி மட்டுமின்றி நாமக்கல், கரூர், திருப்பூர், சேலம் போன்ற வெளி மாவட்டங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
வாரம் தோறும் 600 முதல் 700 மாடுகள் வரத்து ஆகும். பசுமாடுகள் ரூ.30 ஆயிரம் வரையும், எருமை மாடுகள் ரூ.45 ஆயிரம் வரையும், வளர்ப்பு கன்றுகள் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை ஆகும்.
அதேபோன்று, இச்சந்தையில் வரத்தாகும் மாடுகளை கோவை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களிலில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா போன்ற மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கி செல்வர்.
இந்நிலையில், மாட்டுச்சந்தைக்கு வரும் மாடுகளுக்கு தலா இரு முறை கட்டணம் வசூலிப்பதாக குற்றசம் சாட்டியுள்ள விவசாயிகள், வியாபாரிகள், மாட்டிற்கு ஒரு முறை மட்டுமே வசூலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது: ஈரோட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மாட்டுச்சந்தை செயல்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு, தற்போது உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த மாட்டுச்சந்தை, கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்திற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் வாடகை செலுத்தப்பட்டு வரப்படுகிறது.
இந்நிலையில், மாட்டுச்சந்தைக்கு கொண்டு வரப்படும் மாடுகளுக்கு, விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து கட்டணம் என்ற பெயரில் டெண்டர் எடுத்தவர்களால் தலா ரூ.70 வசூலிக்கப்படுகிறது. அதேபோன்று, மாடுகளை வாங்கிச்செல்பவர்களிடம் இருந்து ரூ.50 வசூலிக்கப்படுகிறது.
அதாவது, ஒரே மாட்டிற்கு இரட்டை வரி வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் என்பது பகல் கொள்ளையே தவிர, வேறொன்றுமில்லை. அதேபோன்று, மாட்டுச்சந்தையில் மாடுகள் கொண்டு வருபவர்களுக்கும், வாங்கிச்செல்வோர்களுக்கும் போதுமான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால், அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், மாடுகளுக்கான அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால், கட்டணம் மட்டும் தவறாமல் வசூலிக்கப்படுகிறது. எனவே, மாட்டுச்சந்தையில் கட்டணம் என்ற பெயரில் இருமுறை வசூலிப்பதை கைவிட்டு, மாடுகளை உள்ளே கொண்டு வரும் போது மட்டும் வசூலிக்க வேண்டும். வெளியே கொண்டு செல்லும் மாடுகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது.
விவசாயிகள், வியாபாரிகளுக்கான போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாடுகளுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக, மாட்டுச்சந்தையை தனியார் இடத்தில் நடத்துவதை கைவிட்டு, அரசுக்கு சொந்தமான இடத்தில் நிரந்தரமாக நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது மாட்டுச்சந்தைக்கென்று நிரந்தர இடம் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.