*மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா?
கரூர் : கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலை, லைட்ஹவுஸ் கார்னர், இனாம்கரூர், வெங்கமேடு, தாந்தோணிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம் போன்ற பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்து, அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற முக்கிய சாலைகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் குறுக்கீடு காரணமாக அதிகளவு விபத்துக்கள் நடக்கின்றன. குறிப்பாக, கருர் ரத்தினம் சாலை வழியாக நெரூர், வாங்கல், ஐந்துரோடு, பசுபதிபாளையம் போன்ற பகுதிகளுக்கு அதிக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பகுதியில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் நடமாட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் எளிதாக சாலையை கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுவதோடு, சில சமயங்களில் விபத்துக்களும் நடக்கிறது.
இதேபோல், கரூர் மாநகரத்தை ஒட்டியுள்ள வெள்ளியணை சாலை, வாங்கல் சாலை போன்ற பகுதிகளிலும் அதிகளவு கால்நடைகள் குறுக்கிடுவதால் இந்த பகுதிகளிலும் விபத்துக்கள் நடைபெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். கால் நடைகளை வளர்ப்போர் கவனக்குறைவு காரணமாக சாலையில் விடுவதால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. இதுகுறித்து கால்நடை வளர்ப்பவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முக்கிய சாலைகளில் கால்நடைகள் குறுக்கிடுவதை கண்காணித்து, வளர்ப்பவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அபராதமும் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுத்து விபத்தை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.