பட்டிவீரன்பட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்தின்றி இன்றி, ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால், பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 23.6 அடி உயரமுள்ள காமராஜர் அணை உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரும்பாறை, மஞ்சள்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தால் அணைக்கு நீர்வரத்து இருக்கும்.
மேலும், புல்லாவெளி நீர்வீழ்ச்சியிலிருந்து குடகனாறு ஆறு வழியாகவும் அணைக்கு தண்ணீர் வரும். இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், சித்தையன்கோட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. திண்டுக்கல் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக திண்டுக்கல் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இது மட்டுமின்றி சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் மற்றும் ஆத்தூர், சீவல்சரகு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நன்கு பெய்ததால், கடந்த ஜனவரி மாதம் அணை முழுகொள்ளவை எட்டியது. அதன்பின்னர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கோடை வெயில் காரணமாகவும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால், பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கோடை மழை பெய்யும்பட்சத்தில் அணைக்கு நீர்வரத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.