புதுடெல்லி: பாஜவின் சக்ரவியூகத்தில் நாடு சிக்கி கொண்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அண்மையில் விமர்சனம் செய்திருந்தார். அவரது இந்த பேச்சு மக்களவையில் நேற்று எதிரொலித்தது. மக்களவையில் நேற்று பேசிய பாஜ உறுப்பினர் அனுராக் தாக்கூர், “தாமரைக்கு இணையான வார்த்தைகளில் ஒன்று ராஜீவ்(ராகுல் காந்தியின் தந்தை ).தாமரையை வன்முறையுடன் இணைத்த நீங்கள் ராஜீவ் காந்தியையும் வன்முறையுடன் இணைத்தீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “ஜாதிவாரி கண்கெடுப்பு நடத்த வேண்டும் என சிலர் வலியுறுத்துகின்றனர். இதற்காக மகாபாரதத்தையும் அவர்கள் துணைக்கு அழைக்கின்றனர். அவர்கள் தற்செயலான இந்துக்கள். அவர்களின் மகாபாரத அறிவும் தற்செயலானது” எனக்கூறிய அனுராக் தாக்கூர் ராகுலின் ஜாதி பெயரை குறிப்பிட்டு பேசினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவிக்க அவையில் அமளி நிலவியது. இதையடுத்து, அனுராக் தாக்கூர் பேசியவை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “ஆதிவாசிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் பிரச்னைகளை பற்றி யார் பேசினாலும் அவர்களுக்கு எதிராக அவதூறு பரப்பப்படுகிறது. ஆனால் இப்படி அவதூறு பரப்பிய அனுராக் தாக்கூர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நான் விரும்பவில்லை. எவ்வளவு அவதூறு பரப்பினாலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை இந்த அவையிலேயே எதிர்க்கட்சிகள் உறுதி செய்யும்” என ஆவேசமாக தெரிவித்தார்.
* ராகுலுக்கு ஆதரவாக களம் இறங்கிய அகிலேஷ்
ராகுலின் ஜாதி தொடர்பாக அனுராக் தாக்கூர் பேசிய பேச்சை அப்போது அவையை வழிநடத்திய ஜெகதாம்பிகா பால் நீக்கி உத்தரவிட்டார். இருப்பினும் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ் கடும் ஆத்திரம் அடைந்து,’நீங்கள் எப்படி இந்த அவையில் ஒருவரின் ஜாதி குறித்து கேள்வி எழுப்பலாம்?’ என்று கேள்வி எழுப்பினர். அவரை அவைத்தலைவர் சமாதானம் செய்தார்.
* அனுராக் தாக்கூரை புகழ்ந்த மோடி
மக்களவையில் ராகுல் குறித்து பேசிய அனுராக் தாக்கூரை பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,’ எனது இளம் மற்றும் ஆற்றல் மிக்க சக எம்பியான அனுராக் தாக்கூரின் இந்த உரை அவசியம் கேட்க வேண்டும். உண்மைகள் மற்றும் நகைச்சுவையின் சரியான கலவை, இந்தியா கூட்டணியின் அழுக்கு அரசியலை அம்பலப்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
* ராகுல் குடும்பத்தின் ஜாதி தியாகி
மக்களவையில் ராகுல் காந்தியின் ஜாதி குறித்து அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பியதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,’ சமூக பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது இந்த நாட்டின் 80 சதவீத மக்களின் கோரிக்கை. ஜாதி தெரியாதவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுவதாக இன்று பார்லிமென்டில் கூறப்பட்டது. இந்திய மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் இப்போது நாடாளுமன்றத்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். இது அவரது உத்தரவின் பேரில் நடந்ததா என்பதை மோடி தெளிவுபடுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.