Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் : முதல்வர் சித்தராமையா உறுதி

Karnataka, Caste Censusபெங்களூரு : சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 2013-2018 காலக்கட்டத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, மாநிலத்தில் வாழும் அனைத்து வகுப்பினரின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல், சமூகநீதி உட்பட அனைத்து தகவல்கள் பெறும் நோக்கத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அப்போது மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய தலைவராக இருந்த காந்தராஜ் தலைமையிலான ஆணையம் கடந்த 2015 ஏப்ரல் மாதம் கணக்கெடுப்பு நடத்தி 55 நாட்களில் முடித்து மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் அறிக்கையை ஒப்படைத்தது. ஆனால் ஆணையம் அரசிடம் ஒப்படைக்காமல் 9 ஆண்டுகளாக கிடப்பில் வைத்திருந்தது.

இந்நிலையில், மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் சித்தராமையா தலைமையில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் ஆட்சியமைத்த நிலையில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை செயல்படுத்த முடிவு செய்தது. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை வெளியிட லிங்காயத்து மற்றும் ஒக்கலிக சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய தலைவராக ஜெயபிரகாஷ் ஹெக்டே இருந்தபோது, கடந்த 2024 பிப்ரவரி 29ம் தேதி சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை முதல்வர் சித்தராமையாவிடம் வழங்கினார். சுமார் 4000க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட அறிக்கையில் முழு விவரம் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அறிவியல்பூர்வமற்றது என்று கூறி லிங்காயத்து மற்றும் ஒக்கலிக சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ஆனால் ₹160 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுப்பதில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு உறுதியாக இருக்கும் நிலையில், அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, ‘கடந்த ஆண்டு அறிக்கை எங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையை அமைச்சரவையில் வைத்து விவாதிக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை எடுக்க ₹160 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமைச்சரவையில் வைத்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இட ஒதுக்கீடு ஆகியவற்றிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகிய இரண்டுமே இருக்கத்தான் செய்யும்’ என்று சித்தராமையா கூறினார்.

ஜனவரி 2ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல், ‘அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், முதல்வர் சித்தராமையாவும் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை விவாதிக்கப்படும்’ என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

Karnataka, Shivakumarதனிக்கூட்டம் குழப்பம் வேண்டாம் டி.கே.சிவகுமார் அறிவுரை

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஒக்கலிக சங்கம் தனிக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அந்த கூட்டத்தை நடத்தி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய டி.கே.சிவகுமார், நான் எந்த கூட்டமும் நடத்தவில்லை.

கூட்டம் நடத்த எனக்கு தேவையுமில்லை. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக இன்று (நேற்று) தனிக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதில் பங்கேற்க மாட்டேன் என்று கூறினேன். இப்போது கூட்டத்தை நடத்தி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். எனவே அந்த கூட்டத்தை ஒத்திவைக்க அறிவுறுத்தினேன். நாங்கள் யாருக்கும் எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்க மாட்டோம் என்ற உறுதியையும் அவர்களுக்கு அளித்தேன். ஒக்கலிக சங்கத்தின் புதிய நிர்வாகிகள் குழு சமரசம் செய்து என்னை சந்திக்க வந்தது. மீண்டும் நிர்வாகிகளிடையே சண்டை வந்தால் நான் நிர்வாகியை நியமிப்பேன் என்றார்.

மாடுகள் மடியை வெட்டியவர் மீது நடவடிக்கை

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் பசு மாடுகளின் மடியை மர்ம நபர்கள் வெட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்து அமைப்புகளும், பாஜவும், இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்திவரும் நிலையில், இதுதொடர்பாக பேசிய முதல்வர் சித்தராமையா, மாடுகளின் மடியை வெட்டியது குற்றம்.

அதை செய்தது யார் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையரிடம் பேசினேன். குற்றவாளிகளை விரைவில் கைது செய்யுமாறு அறிவுறுத்தினேன். குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். அரசியல் காரணங்களுக்காக இந்த விவகாரத்தில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தக்கூடாது என்று முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தினார்.