புதுடெல்லி: நாடாளுமன்ற கமிட்டி கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான நாடாளுமன்ற கமிட்டியின் முதல் கூட்டம் அதன் தலைவர் பாஜ எம்பி கணேஷ்சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என திமுக எம்பி டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்தார். காங்கிரசை சேர்ந்த மாணிக்கம் தாகூர் சாதி வாரி கணக்கெடுப்பது குறித்து முதலில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுகுறித்து வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ மாணிக்கம் தாகூரின் கோரிக்கைக்கு திரிணாமுல் எம்பி கல்யாண் பானர்ஜி ஆதரவு தெரிவித்தார். சாதி வாரியான கணக்கெடுப்பு குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுத வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பீகாரை சேர்ந்த ஐக்கிய ஜனதா தள எம்பி கிரிதாரி யாதவ், சாதி வாரி கணக்கெடுப்பு பற்றி நாடாளுமன்ற கமிட்டி கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்’’ என தெரிவித்தன. ஒன்றிய பாஜ அரசில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதாதளம் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.