துர்க்: சட்டீஸ்கர் மாநிலத்தின் பிலாயில் நடந்த மகிளா சம்பரிதி சம்மேளன் நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரியங்கா காந்தி, ‘‘அரசியலில் மதிப்புகள் மாறிவிட்டன. மக்களின் உணர்வுகள் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. அரசியல் சதியின் ஒரு பகுதியாக சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். எனவே அவர்கள் அடிப்படை கேள்விகளை கேட்க மாட்டார்கள். மதம், ஜாதியின் பெயரால் வாக்கு கேட்பவர்களிடம் உங்களுக்காக என்ன செய்தார்கள் என்று கேளுங்கள்? பிரதமர் மோடி நடத்திய ஜி20 மாநாடு நன்றாக இருந்தது.
நாட்டின் பெருமையை உயர்த்தியது. ஆனால் அதற்கான செலவினங்கள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. சர்வதேச மாநாட்டு மையத்துக்கு ரூ.27, 000 கோடி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு ரூ.20ஆயிரம் கோடி மற்றும் இரண்டு விமானங்களுக்கு தலா ரூ.8000கோடியும் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் சாலைகள் ஏன் மோசமான நிலையில் உள்ளன, வேலைவாய்ப்பு இல்லை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து பிரதமர் ஏன் பதிலளிக்கவில்லை. அவரது தொழிலதிபர் நண்பர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.1600கோடி சம்பாதிக்கும்போது விவசாயிகள் நாள் ஒன்றுக்கு ரூ.27 மட்டுமே சம்பாதிப்பதற்கு பிரதமர் பதில் கூறவில்லை” என்றார்.