டெல்லி: ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து தனியார் தொலைக்காட்சி நடத்திய ஆய்வை பதிவிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; இந்தியாவில் ஒவ்வொரு இந்தியருக்கும் நீதி வழங்கிடும் வகையிலும், சம உரிமை வழங்கிடும் வகையிலும் அரசியலமைப்பு அமைந்திருந்தாலும், 90% இந்தியர்களின் வளர்ச்சியும், வாய்ப்பும் புறக்கணிக்கப்படுகின்றன. அந்த 90% மக்களாக பட்டியலினத்தவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், சிறுபான்மையினரும், பொதுப்பட்டியலில் உள்ள உழைக்கும் மக்களும் இருக்கின்றனர்.
இது மிகவும் வருந்துவதற்குரிய செய்தியாக இருக்கிறது. எனவே, அரசியலமைப்பின் வழிகாட்டலுடன் சமூகநீதியையும், சமூக பொருளாதார சம உரிமையையும் வழங்கிடும் பொருட்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு, நாட்டின் 90% மக்களை சமூக சார்ந்தும், பொருளியல் சார்ந்தும் வளர்ச்சி அடைய உதவும். மேலும், நாட்டில் நடக்கிற பல்வேறு மோசடிகளை வெளிச்சமிட்டு காட்டும் கருவியாகவும் சாதிவாரி கணக்கெடுப்பு அமையும். இதுவே, மக்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.
இதனை பிரதமர் மோடி கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும் அல்லது அடுத்த பிரதமர் வரும் வரை காத்திருந்து, சாதிவாரி கணக்கெடுப்பு செயல்படுத்தப்படுவதை காண்பவராக மோடி இருப்பார்” என்றார்.