சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சமுதாயங்களில், 30 ஆயிரத்திற்கும் கூடுதலாக மக்கள் தொகை கொண்ட அனைத்துச் சாதிகளுக்கும், தனித்தனியாக நலவாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களுக்கு நிதி அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பதால், ஒவ்வொரு சமூகத்திற்கும் தேவையான நலத்திட்ட உதவிகள், முதியோர் ஓய்வூதியம், கல்விக்கட்டணம், தொழில் தொடங்கக் கடனுதவி, மருத்துவ உதவிகள் ஆகியவற்றை அந்தந்த வாரியங்களே வழங்குகின்றன.
அதேபோன்ற வாரியங்களை தமிழ்நாட்டிலும் தொடங்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. சமூகநீதி மண் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால், சமூக, பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு பின்தங்கி விடும். எனவே, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்கான கால அட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும்.