*டிஎஸ்பி வெங்கடேசன் எச்சரிக்கை
கோவில்பட்டி : தனியார் பேருந்துகள், மினி பஸ் மற்றும் ஆட்டோக்களில் சாதி பாடல்களை ஒலிபரப்பக்கூடாது என கோவில்பட்டியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டிஎஸ்பி வெங்கடேசன் வாகனஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் மினி பஸ்கள், தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற டிஎஸ்பி வெங்கடேசன் பேசுகையில் ‘‘பஸ் நிறுத்தம் தவிர தேவையற்ற இடங்களில் பஸ்களை நிறுத்தி ஆட்களை ஏற்றி, இறக்க கூடாது. அவ்வாறு ஏற்றி இறக்குவதன் மூலம் அப்பகுதியில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
எனவே அவற்றை தவிர்க்க வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது. படிகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதை அனுமதிக்க கூடாது. பேருந்தில் வரும் பயணிகளிடம் கண்டக்டர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் அடிக்க கூடாது. பஸ்களில் சாதி தொடர்பான பாடல்களை ஒலிபரப்ப கூடாது. அவ்வாறு ஒலிபரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரிக்கை விடுத்தார். முன்னதாக போக்குவரத்து எஸ்ஐ செல்வகுமார் வரவேற்றார். கூட்ட ஏற்பாடுகளை கோவில்பட்டி போக்குவரத்து காவல்துறையினர் செய்திருந்தனர்.