நெல்லை: சாதிய, மதவாத வன்முறைகளைத் தடுக்க காவல் துறையில் தனி பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நாங்குனேரியில் மாணவர்களுக்கு இடையிலான மோதலில் படுகாயமடைந்த பட்டியல் பிரிவு மாணவர் மற்றும் அவரது சகோதரியை நெல்லை அரசு மருத்துவமனையில் சாந்தித்து திருமாவளவன் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாங்குநேரி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் சந்துரு ஆணையம் நல்ல வழிகாட்டுதலை தரும் என்றார்.
மேலும், ஒரு நபர், அமைப்பு அல்லது சாதி தூண்டிவிட்டது என்று குற்றம்சாட்ட மாட்டேன். ஆனால் மாணவர்கள் இடையே இதுபோன்ற மோதல் உருவாக, சமூக சூழல் தான் காரணம். சுயசாதி பெருமை பேசுகிறேன் என்ற பெயரில், வேற்று சாதியை வெறுக்கும் சூழல் ஏற்படுவதை உற்று நோக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் அவர்களுக்கு நல்ல வீடு, பிள்ளைகளை பாதுகாப்பாக படிக்க வைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆண்டுதோறும் 40 பேர் படுகொலை செய்யப்படுவதாக வேதனை தெரிவித்த திருமாவளவன் நாங்குநேரி, வள்ளியூர் பகுதிகளை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றார்.