*மலைக்குறவர் இன மக்கள் கோரிக்கை
செய்யாறு : செய்யாறு தாலுகா அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்தி கிராமத்தில் ஆரம்ப பள்ளி அருகே கடந்த நான்கு தலைமுறைகளாக மலைக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மூங்கில் கூடை விற்பது, கோலமாவு விற்பது, ஊறுகாய், சேமியா, அவுல், அப்பளம் போன்ற உணவு மற்றும் தின்பண்டங்கள் ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்கள் குடியிருக்கும் பகுதியில் ஆரம்ப பள்ளியும் அதன் அருகில் குளமும் உள்ளது. ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது ஆரம்பப் பள்ளி அருகே சுற்றுச்சுவர் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் அத்தி முருகர் கோயிலுக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க அதே பகுதியில் தங்கும் அறை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
அங்கு வசிக்கும் மலைக்குறவர் குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ் மட்டம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் கட்டுமான பணியை கட்ட முற்பட்ட போது ஊராட்சி நிர்வாகம் கட்டுமான பணிகளை புதிதாக மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது. மேலும் நீண்ட காலமாக வசித்து வரும் உங்களுக்கு மாற்று இடம் வழங்கி அரசு மூலம் வீடு அமைத்து தரப்படும் என கூறப்பட்டது.
இருப்பினும் இதற்கு மலைக்குறவர்களும் அங்கு வசிக்கும் சிலரும் ஆட்சேபனை தெரிவித்து வந்துள்ளனர். மேலும் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டாவும் மலைக்குறவர் என சாதி சான்றை அரசு வழங்கிட வேண்டும் என சில தினங்களாக வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகியிருந்தது.
இதுகுறித்து செய்யாறு தாசில்தார் வெங்கடேசனிடம் கேட்டபோது ஏற்கனவே குடியிருக்கும் மலைக்குறவர்களுக்கு இரு வீட்டுமனை பட்டா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரம்ப பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது. மேலும் அவர்கள் நீண்ட நாட்களாக வைத்து வரும் கோரிக்கையான மலைக்குறவர் சான்று உரிய ஆவணங்கள் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.