*பழங்குடியின மாணவ, மாணவிகள் திடீர் போராட்டம்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, பூண்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பழங்குடியின மாணவ, மாணவிகள். பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாதி சான்றிதழ் கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் இந்து ஆதியன் என்ற பழங்குடியினத்தை சேர்ந்த தங்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு பல முறை கலெக்டரிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பதால் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, 100 நாள் வேலை அடையாள அட்டை, குழந்தைகளின் பள்ளி பாடப்புத்தகங்கள், நலவாரிய அட்டை, வீட்டு மனைப்பட்டா ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாக அறிவித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களுடன், தஞ்சாவூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல், பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீஸ் வாகனத்தில், கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலகத்துக்கு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.