ஈரோடு: மரவள்ளிக்கிழங்கின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், ஏற்றுமதியை ஊக்குவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி, சிவகிரி, அந்தியூர், மலைப்பகுதிகளான கடம்பூர், பர்கூர், தாளவாடி மற்றும் திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மரவள்ளிக்கிழங்கு விலை கடுமையான சரிவை சந்தித்து வருவதால் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதில், கடந்த ஆகஸ்ட் மாதம் மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் விலை வீழ்ச்சி அடைந்து ரூ.7,500க்கு விற்பனையானது. தற்போது, மேலும், ரூ.1,000ம் சரிவடைந்து, தற்போது, ஒரு டன் ரூ.6,500க்கு கொள்முதல் செய்வதால் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாராகும் ஜவ்வரிசி 90 கிலோ மூட்டை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தற்போது ரூ.300 குறைந்து ரூ.3,700க்கும், ஸ்டார்ச் மாவு 90 கிலோ ரூ.3 ஆயிரம் வரை விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கின் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்திட தமிழ்நாடு அரசு ஏற்றுமதியை ஊக்கப்படுத்திட வேண்டும். அதேபோல், மரவள்ளிக்கிழங்கு சார்ந்த பொருட்களை இறக்குமதிக்கு தடை செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.