*சேகோ ஆலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் தொகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நெல், கரும்பு முக்கிய நஞ்செய் பயிர்களாக சாகுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் ஆண்டு பயிரில் கரும்புக்கு அடுத்தபடியாக மரவள்ளிக் கிழங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
மரவள்ளிக் கிழங்கு சாகுபடியை பொருத்தவரை பராமரிப்பு எளிதாக உள்ளது. சொட்டுநீர் பாசனம் மூலம் குறைந்த அளவு தண்ணீர் பாய்ச்சினால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
இதனால் நீர்வளம் குறைந்த பகுதியில் கூட விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பைக் கொடுத்துவிட்டு பணத்தை வாங்க மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலைமை இதில் இல்லை. இதனால் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி ஒவ்வொரு ஆண்டும் ரிஷிவந்தியம் தொகுதியில் அதிகரித்து வருகிறது.
ஆனால் இங்கு விளையும் மரவள்ளிக் கிழங்கை சேலம் மாவட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து செலவு அதிகரிப்பதோடு, இடைத்தரகர்களின் தலையீட்டால் கிழங்கு கொள்முதல் விலையும் சரிவது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்குத் தீர்வாக ரிஷிவந்தியம் தொகுதியில் அரசு சேகோ ஆலையை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரிஷிவந்தியம் தொகுதியில் சேகோ ஆலையை விரைவில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.