சென்னை: சின்னத்திரை நடிகை முதல் கணவர் இருந்தபோதே 2வது திருமணம் செய்து கொண்ட வழக்கில், விரைவில் நீதிமன்றத்தை நாடி தீர்வு காணப்படும் என காவல் நிலையத்தில் ஆஜரான பின் தொழிலதிபர் பேட்டி அளித்தார். சென்னை போரூர் அடுத்த கொளப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜ் கண்ணன் (47), தொழிலதிபர். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகை ரிஹானா பேகம். இவர் சமூக வலைத்தளங்களிலும் மீடியாக்களிலும் சின்னத்திரை தொடர்பாக அவ்வப்போது பரபரப்பாக பேட்டி கொடுத்துள்ளார். இந்நிலையில், ராஜ் கண்ணன் நேற்றுமுன்தினம் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:
பிரபல சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் தனக்கு தெரிந்த நண்பர் மூலம் அறிமுகமானார். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் கூறினார். கணவரை விவாகரத்து செய்து விட்டதாக அவர் கூறியதால் நட்பாக பழகி வந்த நிலையில் காதலாக மாறியதால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தோம்.
இதையடுத்து பூந்தமல்லி கரையான்சாவடியில் உள்ள அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தேன். பின்னர் அவர்களது உறவினர்கள் முன்னிலையில் ரிஹானா பேகத்தை தாலி கட்டி திருமணம் செய்து கொண்டேன்.
இந்நிலையில், தான் சினிமா துறையில் பணிபுரிவதால் அடிக்கடி வெளியூரில் சென்று தங்க வேண்டி இருப்பதாக அவர் கூறினார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருமணத்திற்கு முன்பு அவருக்கு தேவையான பல்வேறு பொருட்களை பல லட்சங்கள் செலவு செய்து வாங்கி கொடுத்ததுடன் பணமாகவும் மொத்தம் ரூ.20 லட்சம் வரை கொடுத்துள்ளேன். பின்னர் தான் ரிஹானா பேகம், முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி மோசடி செய்ததுடன் ரூ.20 லட்சம் வரை மோசடி செய்தது தெரிந்தது. எனவே, ரிஹானா பேகத்தின் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், விசாரணைக்காக இருவரையும் நேற்று பூந்தமல்லி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் ஏற்கனவே கூறியிருந்தனர். இதையடுத்து ராஜ் கண்ணன் தனது வழக்கறிஞர்களுடன் பூந்தமல்லி காவல் நிலையத்தில் நேற்று நேரில் ஆஜரானார். போலீசார் விசாரணையின்போது, தன்னிடம் இருந்த ஆவணங்கள், நடிகையிடம் செல்போனில் பேசிய உரையாடல் ஆகியவற்றை கொடுத்துள்ளார். இந்த புகார் தொடர்பாக நீதிமன்றத்தை நாடி நடவடிக்கை எடுத்துக் கொள்வதாக ராஜ் கண்ணன் எழுதி கொடுத்துவிட்டு சென்றார். ஆனால் நடிகை ரிஹானா பேகம் போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து ராஜ் கண்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது: தன்னை திருமணம் செய்து ரிஹானா பேகம் மோசடி செய்ததாகவும், திருமணம் முடிந்த கையோடு தன்னை இதுபோன்று அச்சுறுத்தி, மிரட்டி வருவதாகவும், தானும் சினிமா துறையில் இருந்து வருவதாகவும் என்னை மட்டுமன்றி கோவையிலும் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவரிடமும் நிலம் மற்றும் கார் ஆகியவற்றை வாங்கி இருப்பதாகவும் மேலும், ரிஹானா பேகத்தின் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாகவும் விரைவில் நீதிமன்றத்தை நாடி இதற்கு ஒரு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.