புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து திமுக, காங்கிரஸ், தவெக ஆகியவை உட்பட உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 140 வழக்குகள் தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வக்பு திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் அனைத்து தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
குறிப்பாக திமுகவை பொருத்தமட்டில், இஸ்லாமயிய சட்ட விதிகள், மற்றும் அரசியலமைப்பு ஆகியவைக்கு எதிராக இருக்கும் வக்பு திருத்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வக்பு திருத்த சட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இந்த விவகாரத்தில் எங்களது தரப்பு வாதங்களை முன்வைக்க குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தேவைப்படும். தற்போது அதற்கான போதிய காலம் இல்லை. எனவே வழக்கின் விசாரணைய அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர்,‘‘இந்த வழக்கில் பிரதான மனுதாரர் உட்பட அனைவருக்கும் வாதங்களை முன்வைக்க அவகாரம் வழங்க வேண்டும். ஒருவேளை ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தால் அதுவரையில், முன்னதாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,‘‘இந்த வழக்கை வரும் செவ்வாய்க்கிழமை அதாவது மே.20ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்.
மேலும் மனுதாரர்கள் தரப்பில் அனைவரும் வழக்கின் முக்கிய வாதம் தொடர்பான தங்களது சிறு குறிப்புகளை தயார் செய்து வரும் 17ம் தேதி மாலைக்குள் ஒன்றிய அரசு வழக்கறிஞரிடம் வழங்க வேண்டும். இதைத்தொடர்ந்து ஒன்றிய அரசின் வழக்கறிஞர், அவர்களது தரப்பு வாதங்கள் தொடர்பான குறிப்புகளை தயார் செய்து மனுதாரர்கள் தரப்புக்கு வரும் 19ம் தேதி மாலைக்குள் வழங்கிட வேண்டும். அதுவரையில் இந்த விவகாரத்தில் முன்னதாக உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு என்பது தொடர்ந்து நீடிக்கும்’’ என்று உத்தரவிட்டார்.