சென்னை: தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நேற்று இரவு முதல் பட்டாசுகளை வெடித்து மக்கள் கொண்டாடினர். பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பதற்கு என உச்சநீதிமன்றம் 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கி உள்ளது. அந்தந்த மாநில அரசுகள் எந்த 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்று நிர்ணயித்துக்கொள்ளவும் அனுமதி அளித்ததுள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசுகளை வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததுள்ளது. மேலும் வானவேடிக்கைகள், இரவில் ஒளிரும் பட்டாசுகளுக்காக மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் பட்டாசுகளை சிறுவர்கள், இளைஞர்கள் வெடித்து வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் சென்னையில் பதிவு செய்யப்பட்டது. அதிகளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக மொத்தம் 19 வழக்குகளும் பதிவானது. அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுப்பட்டதாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.