மதுரை: ஓராண்டில் நிலுவை வழக்குகள் 65.77 சதவீதம் குறைந்துள்ளது என்றும், 1.44 லட்சம் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிற்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த பிரின்ஸ் பிரபுதாஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த வழக்கில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: விசாரணையில் சிறந்த நடைமுறையை தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கொண்டு வந்துள்ளார். குறிப்பாக கொலை, ஆதாயக் கொலை, போக்சோ, வகுப்பு கலவரம் உள்ளிட்ட வழக்குகளின் விசாரணையை கண்காணித்து தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையுடன், கண்காணிப்பு அதிகாரியையும் நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் எஸ்பி தலைமையில் ஆய்வு கூட்டமும் நடக்கிறது. சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆடியோ – வீடியோ முறையில் பதிவு செய்தல் என்பது மிகவும் முக்கியமானதாகியுள்ளது. இதற்காக தென்மண்டல ஐஜி பல்வேறு சுற்றறிக்கைகளை கொடுத்து, நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். ஐஜியின் நடவடிக்கை, குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிச் செல்வதை தடுக்கும். இதற்கான புள்ளிவிபரங்களையும், நடைமுறைப்படுத்தும் பணியிலும் ஐஜிக்கு மிகப் பெரிய வலியை தந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.
தென்மண்டல ஐஜியின் நடவடிக்கையால் ஐகோர்ட் கிளைக்கு உட்பட்ட கன்னியாகுமரி, தேனி, நெல்லை, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஜூன் 20 வரையில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 451 வழக்குகள் விசாரணை நிலுவை மற்றும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நிலுவை வழக்குகளில் கடந்த ஓராண்டில் மட்டும் 65.77 சதவீதம் குறைந்துள்ளது. தென்மண்டல ஐஜியின் அறிக்கை அடிப்படையில் மாவட்டந்தோறும், நீதிமன்றம் வாரியான அறிக்கையை, அந்தந்த முதன்மை மாவட்ட நீதிபதிகள் தரப்பில் தாக்கல் செய்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை செப். 29க்கு தள்ளி வைத்தார்.