திருவனந்தபுரம்: மலையாள நடிகையான ஹனிரோஸ் சமீபத்தில் தன்னுடைய முகநூலில் வெளியிட்டிருந்த பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்கு சென்றபோது அந்தக் கடையின் அதிபர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவரது வேறொரு கடை திறப்பு விழாவுக்கு என்னை அழைத்த போது நான் அதில் கலந்து கொள்ள மறுத்துவிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் சமூக வலைதளங்களில் என்னை ஆபாசமாக சித்தரித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலை தொடர்ந்தால் அவர் மீது நான் போலீசில் புகார் செய்வேன் என்று நடிகை ஹனிரோஸ் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அந்த நகைக்கடை அதிபர் யார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நடிகை ஹனிரோசிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த நபர் கேரளாவைச் சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபரான பாபி செம்மணூர் என தெரியவந்துள்ளது. அவருக்கு எதிராக நடிகை ஹனிரோஸ் நேற்று எர்ணாகுளம்போலீசில் புகார் செய்துள்ளார். இதன் பேரில் பாபி செம்மணூர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


