திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த மானாம்பதி, வளவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய, மகளுக்கு கடந்த 27ம்தேதி பூப்புனித நீராட்டு விழா நடந்தது. விழாவிற்கு வந்த கோவிந்தராஜின் உறவினர்கள், வேனில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது, அந்த வேனுக்கு பின்னால், அப்பகுதியில் கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடமிருந்து பால் சேகரித்து எடுத்துச் செல்லும் பால் வேன் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து, பால் வேன் ஓட்டுநர், அதே பகுதியை சேர்ந்த பால் விற்பனை நிர்வாகியான கோபு என்பவருக்கு போன் செய்து, பால்வண்டி செல்வதற்கு வழி விடவில்லை என்றும், இதனால் தாமதமாகிறது என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து விழா நடைபெறும் இடத்திற்கு அருகே வந்த கோபு, அங்கிருந்தவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் சமாதானம் பேசி கோபுவை அனுப்பி வைத்தனர்.
பின்னர், வேனை ஓரமாக நிறுத்திவிட்டு பால் வண்டிக்கு வழி விட்டனர். இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் வளவந்தாங்கல் சர்ச் தெருவை சேர்ந்த முனியாண்டி(38) என்பவர், அங்குள்ள பள்ளிக்கூடம் அருகில் நின்றிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த கோபு, பாபு, கவுதம், சுகன்ராஜ் உள்ளிட்ட 6 பேர், முனியாண்டியை சரமாரியாக தாக்கி, செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. முனியாண்டியின் அலறல் சத்தத்தை கேட்டு அவருடைய உறவினர்கள் ஓடி வந்து காயமடைந்த முனியாண்டியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இதுகுறித்து, முனியாண்டி கொடுத்த புகாரின்பேரில் மானாம்பதி போலீசார், 6 பேர் மீது வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, கோபு என்பவரை கைது செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 5 நபர்களை ேதடி வருகின்றனர்.